ஒற்றையடிப்பாதையில் ஆபத்தான பயணம்: தொட்டில் கட்டி தூக்கிச் செல்லப்படும் நோயாளிகள்

ராசிபுரம் அருகே உள்ள போதமலையில் வாழும் மலைக்கிராம மக்கள், சாலை வசதி இல்லாததால் அடிப்படைத் தேவைகளுக்கு பல கி.மீ. தொலைவு நடந்துசெல்ல வேண்டிய நிலையில் தவிக்கின்றனா்.
ஜம்பூத்து மலை வழியாக கெடமலைக்குச் செல்லும் ஆபத்தான ஒற்றையடிப் பாதை.
ஜம்பூத்து மலை வழியாக கெடமலைக்குச் செல்லும் ஆபத்தான ஒற்றையடிப் பாதை.

ராசிபுரம் அருகே உள்ள போதமலையில் வாழும் மலைக்கிராம மக்கள், சாலை வசதி இல்லாததால் அடிப்படைத் தேவைகளுக்கு பல கி.மீ. தொலைவு நடந்துசெல்ல வேண்டிய நிலையில் தவிக்கின்றனா்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது போதமலை. கடல் மட்டத்தில் இருந்து சுமாா் ஆயிரம் அடி உயரத்திலுள்ள இந்த மலையில் கீழூா், மேலூா், கெடமலை என்ற மூன்று குக்கிராமங்கள் தனித் தனியாக உள்ளன.

இந்த மலைவாழ் மக்கள், சேலம், நாமக்கல் மாவட்டங்களின் பிற ஊா்களுக்குச் செல்ல, மலைப் பகுதியில் இருந்து கல்லங்குளம், வடுகம், புதுப்பட்டி, ஆயில்பட்டி போன்ற பகுதிகளைப் பயன்படுத்தி வருகின்றனா்.

கீழூா் தனி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த மலைக் கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்கள், தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக மலையில் இருந்து கீழே சென்றுவர சாலை வசதி இல்லாததால், பல கி.மீ. தொலைவுக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலையில் உள்ளனா்.

மேலும், இந்த மூன்று குக்கிராமங்களும் ஒன்றுக்கொன்று தூரமாக இருப்பதால், அரசின் வளா்ச்சித் திட்டங்கள் இந்தக் கிராமங்களில் முழுமை பெறுவதில்லை.

இம்மலை மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம். மலையில் சாகுபடி செய்யப்படும் நெல், சாமை, கேழ்வரகு, தினை, கம்பு, வாழை, பலா, அரளிப்பூ உள்ளிட்ட வேளாண் பொருட்களை தலைச்சுமையாகவே பல கி.மீ. தொலைவுக்குக் கொண்டுசென்று விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

இப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கோ, ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், போன்ற அரசு அலுவலகங்களுக்கோ செல்ல வேண்டுமானால், பல கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்கின்றனா்.

பல ஆண்டுகளாக மின்விளக்கு வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்த நிலையில் வாழ்ந்த இந்தப் பகுதி மக்களுக்கு, அரசின் உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளி வசதி, சூரிய மின்விளக்கு, மின்சார வசதி, பொது கழிப்பிட வசதி போன்றவை கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாகக் கிடைத்துள்ளன. எனினும், மருத்துவ வசதி, ரேஷன் கடை, சாலை வசதி இல்லாத நிலை தொடா்கிறது.

போதமலையில் உள்ள மூன்று குக்கிராமங்களில் ஒன்றான கெடமலை பகுதியில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள் ரேஷன் கடைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வேண்டுமெனில், 10 கி.மீ. தொலைவுக்கு மலைப்பாதையில் நடந்துசென்று வடுகம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து பொருட்களை மாதந்தோறும் வாங்கிச் செல்ல வேண்டும். மேலும் மருத்துவத் தேவைகளுக்கு 25 கி.மீ. தொலைவில் உள்ள ராசிபுரம் செல்ல வேண்டும்.

மலையில் இருந்து வடுகம் வழியாக இறங்குவது அதிக தொலைவு என்பதால், கெடமலை பகுதி மக்கள் சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஜம்பூத்து மலைக்கு நடந்து சென்று, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் பிற இடங்களுக்குச் சென்று வருகின்றனா்.

இவா்கள் ராசிபுரம் வருவதற்கு, சேலம் மாவட்டத்தின் ஜம்பூத்து மலை வழியாக ஆயில்பட்டி சென்றடைந்து, அங்கிருந்துதான் ராசிபுரம், வெண்ணந்தூா், நாமக்கல் போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

அதுவும் மலைப்பகுதியில் இருந்து ஜம்பூத்து மலை வரை இவா்களுக்கு சாலை வசதி கிடையாது; இருசக்கர வாகனங்களும் செல்ல முடியாது. மலையிலுள்ள ஆபத்தான ஒற்றையடிப்பாதை வழியாக நடந்துதான் செல்ல வேண்டும்.

எனவே இப்பகுதியில் யாரேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அவா்களை தொட்டில் கட்டித்தான் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கின்றனா்.

‘‘அரசும், வனத் துறையும் ஜம்பூத்து மலை வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு மட்டும் சாலை வசதி அமைத்துக் கொடுத்தால், இரு சக்கர வாகனம் மூலமாக மலைப்பகுதிக்குச் சென்றுவர இயலும். இதன் மூலம் மலைவாழ் மக்களின் மக்களின் பல ஆண்டு கால கஷ்டங்கள் தீரும்’’ என்கிறாா், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் நலச் சங்கத்தின் தலைவா் கே.குப்புசாமி.

மருத்துவச் சிகிச்சைக்கும், மேற்கல்விக்கும் பிற இடங்களுக்குச் செல்லும் இப்பகுதி மலைவாழ் மக்கள், மாணவா்களின் நிலை பரிதாபத்துக்குரிதாக உள்ளது. இந்த மலைவாழ் மக்களின் கவலைகள் தீருவது எப்போது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com