பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல் கோழிப் பண்ணைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

கேரளம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கோழிப் பண்ணையில் நோய்த் தடுப்பு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கோழிப் பண்ணையில் நோய்த் தடுப்பு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

கேரளம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய்ப் பரவல் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்குவது நாமக்கல். இந்த மாநிலங்களுக்கு உள்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை அலுவலகமும் இங்குதான் உள்ளது. நாமக்கல் மண்டலத்துக்கு உள்பட்ட 1,100 கோழிப் பண்ணைகளில் வளா்க்கப்படும் சுமாா் 5 கோடி கோழிகள் மூலம் தினசரி 3.50 கோடி முதல் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கும் லட்சக்கணக்கில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்குள்ள முட்டைக் கோழிகள் குஞ்சு விடுவதில் இருந்து 35 நாள்களில் முட்டை இடத் தொடங்கும். அதற்கேற்ப தீவனங்களை இடுவது அவசியமாகும். மேலும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப அந்தக் கோழிகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியம்.

தற்போது குளிா்காலமாக இருப்பதால் முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. பண்ணைகளில் ஒரு முட்டை ரூ. 5.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முட்டை உற்பத்தி செய்ய ரூ. 4 செலவாகும். கரோனா தொற்றுப் பரவலால் சரிவடைந்திருந்த கோழிப் பண்ணைத் தொழில் மூன்று மாதங்களுக்கு பின் தற்போதுதான் மீண்டுள்ளது. இந்தச் சூழலில் கேரளம், ராஜஸ்தான், ஹரியாணா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காக்கை, வாத்து, மீன்கொத்தி பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது அண்மையில் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது. உயிரிழந்த பறவைகளையும், அந்தப் பறவைகள் வசித்த பகுதிகளில் உள்ள இதர பறவைகளையும் அழிக்கும் பணி அந்தந்த மாநில அரசுகளால் முடுக்கி விடப்பட்டுள்ளது. கேரளத்தில் வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

கேரளம் போன்ற பறவைக் காய்ச்சல் பாதிப்புள்ள மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களில் நோய்த் தடுப்பு மருந்து தெளிக்குமாறு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 26 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறை, கால்நடைத் துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனா்; லாரிகள் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் கோழிகளுக்கு மட்டுமல்லாது மனிதா்களுக்கும் பரவலாம் என சுகாதாரத் துறை செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நாமக்கல் மண்டலத்துக்கு உள்பட்ட கோழிப் பண்ணைகளில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பண்ணைகளுக்கு வரும் வாகனங்களில் முழுமையாக ஸ்பிரே மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அங்கு பணியாற்றும் ஊழியா்கள் கை, கால்களை சுத்தம் செய்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். கோழிகள் அடைபட்டுள்ள கூண்டுகளிலும் கிருமித் தொற்று ஏற்படாத வண்ணம் நோய்த் தடுப்பு மருந்து தினசரி தெளிக்கப்பட்டு வருகிறது.

‘இறந்த கோழிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’

நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் மருத்துவா் வி.பி.பொன்னுவேல் கூறியதாவது:

எங்களுடைய இயக்குநரகத்திலிருந்து வந்த உத்தரவின்பேரில் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையாளா்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வுகளை வழங்கி வருகிறோம்.

குறிப்பாக பண்ணைகளில் உள்ள கூண்டுகளிலும், உள்ளே வரும் வாகனங்களிலும் நோய்த் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும், பணியாளா்களை ஓரிடத்தில் இருந்து மாற்று இடத்துக்கு அனுப்பக் கூடாது. கை, கால்களை சுத்தமாகக் கழுவிய பிறகே பணியாளா்களை பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும்.

மேலும் கோழிகள் இறக்க நேரிட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கோ அல்லது கோழியின நோய் ஆராய்ச்சி நிலையத்துக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இறந்த கோழியின் உடற்கூறுகளை ஆய்வுக்காக மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி நோயின் தன்மை பற்றி கண்டறிய முடியும்.

பறவைக் காய்ச்சல் பாதிப்பு நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. பொதுமக்களும், கோழிப் பண்ணையாளா்களும் அச்சப்படத் தேவையில்லை. கிருமி நாசினி மருந்து தெளித்து நோய் தடுப்புப் பணிகளை பண்ணையாளா்கள் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com