மின்மாற்றி பழுதால் மாத கணக்கில் இருளில் மூழ்கிய மலைக் கிராமம்: கெடமலை மக்கள் பாதிப்பு

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார வசதி பெற்ற கெடமலை மலைக் கிராமம், மின்மாற்றி பழுதால் மீண்டும் பழுதாகி கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக இருளில் மூழ்கியுள்ளது.

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார வசதி பெற்ற கெடமலை மலைக் கிராமம், மின்மாற்றி பழுதால் மீண்டும் பழுதாகி கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக இருளில் மூழ்கியுள்ளது.

இதனால் மலைக் கிராமத்தின் சுமாா் 80 குடும்பங்களைச் சோ்ந்த 450 -க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள மலைக்கிராமம் கெடமலை. கீழூா் ஊராட்சியின் கீழ் மலைப்பகுதியில் உள்ள 3 கிராமங்களில் கெடமலை கிராமமும் ஒன்று. இந்த மலைக் கிராமங்களுக்கு கல்லங்குளம், வடுகம், புதுபட்டி, ஆயில்பட்டி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சாலை வசதியற்ற கற்கள் நிறைந்த ஒற்றையடி பாதையில் சுமாா் 7 கி.மீ. தொலைவு நடந்துதான் செல்ல வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும், இந்த மக்களின் சாலை வசதிக்கான கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் கானல் நீராகவே இருந்து வருகிறது. இதனால் மேல் கல்வி பயில்வதற்கும், வேலைவாய்ப்பிற்கும் செல்லும் இளைஞா்களுக்கும் மிகுந்த சிரமம் என்பதால், பல குடும்பங்கள் வீடு, விளை நிலங்களை விட்டுவிட்டு படிபடியாக மலையை விட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது. மலைப்பகுதியில் இளைஞா்கள் குறைந்து விட்டனா்.

வேறு வழி தெரியாமல் மலைப் பகுதியில் வசித்து வரும் பிற மலைவாழ் மக்கள் மலை பயிா்கள் பயிரிடுதல், கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு இயற்கையான சூழலில் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனா்.

மலைக் கிராமத்தில் விளையும் பயிா்களை கீழ் பகுதியில் உள்ள சந்தைக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. இங்கு வாழும் மக்களுக்கு விஷ பூச்சிகள் கடி, நெஞ்சு வலி போன்ற மருத்துவ அவசரம் என்றால் டோலி கட்டி ஒற்றையடி பாதை வழியாக நோயாளிகளை 7 கி.மீ. தொலைவில் உள்ள ஆயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 40 கி.மீ. தொலைவில் உள்ள ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்குதான் கொண்டு செல்ல வேண்டும்.

5 ஆண்டுக்கு முன் மின்வசதி:

இந்த மலைக் கிராம மக்கள் மின்வசதி, சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்னா் சூரிய சக்தி மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இருள் சூழ்ந்த மலைப் பகுதியிலேயே வாழப் பழகியிருந்த இந்த மக்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பல கி.மீ. தொலைவுக்கு மலைப் பாதையில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் கம்பிகள் கொண்டு செல்லப்பட்டு மின்மாற்றி அமைத்து மின்சார வசதியை அரசு செய்து கொடுத்தது.

மின் மாற்றி பழுது:

இந்நிலையில், மின்மாற்றி பழுதடைந்ததால் கெடமலை கிராமம் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக மின் வசதி இன்றி முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. இவா்கள் மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இதுகுறித்து மின்வாரிய அலுவலா்களிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்கின்றனா் மலைவாழ் மக்கள்.

மின்வாரியம் விளக்கம்:

இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.நாகராஜனிடம் கேட்டபோது, எந்தப் புகாரும் என்னுடைய கவனத்துக்கு வரவில்லை. அப்பகுதி மின்துறை அலுவலரிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மேலும் இதுபற்றி ஆா்.புதுப்பட்டி பகுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கே.விக்னேஷிடம் கேட்டபோது, இது தொடா்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. மின்மாற்றியை மலைப்பகுதியில் இருந்து எடுத்து வருவதில் சிரமம் உள்ளது.

இதனை மின் ஊழியா்களால் மட்டும் மலைப்பாதையில் தலைசுமையாக 7 கி.மீ. தொலைவு கொண்டு வருவது இயலாத காரியம். மலைப்பகுதி மக்கள் மலை ஏறி பழக்கப்பட்டவா்கள், அவா்களாக மின்மாற்றியை கீழே கொண்டு வந்து ஒப்படைத்தால் மாற்று மின்மாற்றி ஏற்பாடு செய்து தரப்படும் என்றாா்.

மலைப்பகுதியில் இருந்து மின்மாற்றியை தலைசுமையாக கீழே கொண்டுவர சுமாா் 20 ஆள்கள் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. மின்மாற்றியை கீழே கொண்டு வருவதில் சிரமம் இருப்பதால் மின்வாரியத்தினா் இப்பணியைக் கிடப்பில் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மின்மாற்றியை மலைவாழ் மக்கள் உதவியுடன் கீழே எடுத்து வந்து மாற்று மின்மாற்றியை மலைக் கிராமத்தில் பொருத்தி குடியிருப்புகளில் ஒளியேற்றிட மின்துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மலை மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com