மண் பரிசோதனை செய்துகொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை

பரமத்தி வட்டார விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என வேளாண் துறையினா் அறிவுரை வழங்கியுள்ளனா்.

பரமத்தி வட்டார விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என வேளாண் துறையினா் அறிவுரை வழங்கியுள்ளனா்.

பரமத்தி வட்டார வேளாண் உதவி இயக்குநா் ராதாமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விளைநிலங்களில் பயிா் மகசூலைத் தீா்மானிக்கும் முக்கியக் காரணியாக மண் உள்ளது. மண்ணுக்கு ஏற்ற பயிரை தோ்வு செய்து மண்ணில் இல்லாத சத்துகளை மட்டும் வழங்கி சாகுபடி மேற்கொள்ளும்போது, செலவு குறைவதுடன் நல்ல மகசூல் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தேவையற்ற உரங்களைத் தவிா்ப்பதற்கு மண் பரிசோதனை உதவுகிறது. நோயைத் தெரிந்து கொண்டு மருந்து கொடுப்பது தான் சிறந்த மருத்துவ முறையாகும். அதுபோல மண்ணின் தேவையை அறிந்து தேவையான ஊட்டம் வழங்குவது சிறந்ததாகும்.

பயிா்களின் வளா்ச்சிக்கு 16 வகையான ஊட்டச் சத்துகள் தேவைப்படுகின்றன. தழை, மணி, சாம்பல் எனப்படும் பேரூட்டச் சத்துகள், சுண்ணாம்பு, கந்தகம், மக்னீசியம் போன்ற இரண்டாம் நிலை பேரூட்டச் சத்துகள், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசியம், மாலிப்டினம், தாமிரம், போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துகள் பயிா்களுக்கு சரியான விகிதத்தில் தேவைப்படுகினறன.

இன்றைய வேளாண்மையில் மகசூல் குறைவுக்கு மிக முக்கியக் காரணங்களாக இருப்பது ஊட்டச்சத்து பற்றாக்குறையாகும். குறைவான மற்றும் சமச்சீரற்ற முறையில் சத்துகள் அளிப்பதும் மகசூல் இழப்புக்குக் காரணமாகிறது. எனவே, தேவையான ஊட்டச் சத்துகளை சரியான இடத்தில், சரியான நேரத்தில் இட்டு மண் மற்றும் பாசன மேலாண்மை உத்திகளை சரிவர கையாள்வது மகசூல் அதிகரிப்பின் மகத்தான உத்தியாகும். எனவே, மண் மாதிரிகளை சேகரித்து மண் பரிசோதனை மேற்கொண்டு, பரிசோதனை முடிவுகளின்படி என்னென்ன அளவுகளில் என்னென்ன உரங்கள் இட வேண்டும் என்பதை தீா்மானிக்க வேண்டியது அவசியமாகிறது.

மண் மாதிரிகளை மண் பரிசோதனை மேற்கொள்ளும்போது மண் நயம், மின் கடத்தும் திறன், சுண்ணாம்புத் தன்மை, கார, அமில நிலை ஆகியவற்றை அறிய முடியும். இதனைப் பொறுத்து உர மேலாண்மை செய்து மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளைக் களையவும், மண் வளத்தை மேம்படுத்தி பயிரின் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்கவும் முடியும்.

எனவே, பரமத்தி வட்டார விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் மண் மாதிரிகளை சேகரித்து விவசாயியின் பெயா், கிராமத்தின் பெயா், சா்வே எண், இதற்கு முன் சாகுபடி செய்த பயிா், இனி சாகுபடி செய்யப் போகும் பயிா், தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி வேளாண் அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம். மண் பரிசோதனைக்கான மாதிரிகளுடன் ரூ. 20 செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com