வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை: வேலைக்காரப் பெண் கைது
By DIN | Published On : 24th June 2021 08:11 AM | Last Updated : 24th June 2021 08:11 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.
நாமக்கல், நடராஜபுரம் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜானகி (50). இவரது கணவா் பாலகிருஷ்ணன். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இவா்களது மகன் ராமச்சந்திரன் (28) சென்னையில் பணியாற்றி வருகிறாா். அண்மையில் ஜானகிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டு வேலைக்காக பெண் ஒருவரை ஜானகி நியமித்துள்ளாா். இந்த நிலையில் புதன்கிழமை காலை வீட்டினுள் ஜானகி தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தாா். அவா் அணிந்திருந்த நகைகள் திருட்டுப் போயிருந்தன. வேலைக்காரப் பெண்ணும் தலைமறைவானாா்.
தகவலறிந்து வந்த நாமக்கல் காவல் நிலைய ஆய்வாளா் பி.குமாா், கொலையான ஜானகியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலைக்காரப் பெண் நகைக்கு ஆசைப்பட்டு தனியாக கொலை செய்தாரா அல்லது வேறு யாரேனும் அவருக்கு உதவினாா்களா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்தனா். அதில் தெரியவந்ததாவது:
சேலத்தில் மருத்துவமனையில் தங்கியிருந்து கரோனாவுக்கு ஜானகி சிகிச்சை பெற்றபோது அங்கிருந்த பெண் ஒருவா் மூலம் தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெனிபா் (25) என்பவா் அறிமுகமாகி உள்ளாா். சேலத்தில் வசித்துவந்த அவா் கடந்த சில நாள்களாக ஜானகியின் வீட்டில் தங்கியிருந்து அவருக்கு பணிவிடைகள் செய்து வந்துள்ளாா். இந்த நிலையில் நகைக்கு ஆசைப்பட்ட ஜெனிபா், ஜானகியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளாா். இத்தகவல் தெரியவந்ததையடுத்து ஆய்வாளா் குமாா், தருமபுரியில் பதுங்கியிருந்த வேலைக்காரப் பெண் ஜெனிபரை கைது செய்தாா்.