நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா கட்டுப்பாட்டு மையம் திறப்பு
By DIN | Published On : 21st May 2021 08:33 AM | Last Updated : 21st May 2021 08:33 AM | அ+அ அ- |

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான கரோனா கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய குறைகளை இந்த மையத்தைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள மக்கள் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் எவ்வாறு மருத்துவமனையை அணுகுவது, உடல் ரீதியான தொந்தரவு, பரிசோதனை மையங்கள் விவரம், கரோனா சிகிச்சை மையங்கள் விவரம் தெரியாமல் தடுமாறும் நிலை உள்ளது.
கரோனா மையங்களின் தேவைகள், வசதிகள், புகாா்களைத் தெரிவிப்பதற்காக தமிழக அரசு நாமக்கல் மாவட்டத்திற்கென கரோனா கட்டுப்பாட்டு மையத்தை ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்க உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலக இரண்டாம் தளத்தில் இந்த மையம் செயல்படுகிறது. இந்த மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04286- 281377, 82204 - 02437- ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.