முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பரமத்தி அருகே ரசாயனக் கழிவுகளை கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
By DIN | Published On : 11th October 2021 02:10 AM | Last Updated : 11th October 2021 02:10 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் அருகே ரசாயனக் கழிவுகளைக் கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள வில்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்புக்கல்மேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் கடந்த இரு தினங்களாக வெள்ளை நிற மண்னை டிப்பா் லாரி மூலம் கொண்டு வந்து கொட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளத்தை நிரப்பி வந்துள்ளனா்.
இந்நிலையில் மழை பெய்ததால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியுள்ளது. அங்கு கொட்டப்படுவது ரசாயனம் கலந்த உபயோகமற்ற கழிவுப்பொருள் என தெரிய வந்ததையடுத்து டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா். பின்னா் பரமத்தி வேலூா் வட்டாட்சியா் மற்றும் பரமத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த பரமத்தி போலீஸாரிடம் இப்பகுதியில் கொட்டப்பட்டு வரும் ரசாயனக் கழிவுகளால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு குடிதண்ணீா், பாசனக் கிணறு, ஆழ்துளைக் கிணறுகள் பதிக்கப்படும் நிலை ஏற்படுவதுடன் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். எனவே இந்த ரசாயனக் கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதனையடுத்து பரமத்தி போலீஸாா் பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பா் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.