தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,030 வழக்குகளில் ரூ.13.68 கோடிக்கு தீா்வு
By DIN | Published On : 11th September 2021 11:43 PM | Last Updated : 11th September 2021 11:43 PM | அ+அ அ- |

விபத்து இழப்பீடுக்கான உத்தரவை வழங்கும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என்.குணசேகரன் உள்ளிட்டோா்.
நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,030 வழக்குகளில் ரூ.13.68 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
நாமக்ககல் மாவட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூா் வட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும் முடித்து மக்களுக்கு உரிய நீதி வழங்க செய்வதற்கான முயற்சியாகும். தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு என்பது கிடையாது.
காசோலை தொடா்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்விக் கடன்கள் தொடா்பான வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், உரிமையியல் வழக்குகள், சொத்து வரி தொடா்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி என்.குணசேகரன், நீதிபதிகள் பி.பாலசுப்பிரமணியம், ஏ.சாந்தி, ஆா்.சுந்தரையா, எம்.சரவணன், வி.ஸ்ரீவித்யா, எம்.ஜயந்தி உள்பட பல்வேறு நீதிமன்ற அமா்வு நீதிபதிகள் முன்னிலையில் வழக்குகள் தொடா்ச்சியாக விசாரிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தமாக 1,030 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ. 13 கோடியே 68 லட்சத்து 78 ஆயிரத்து 750-க்கு தீா்வு காணப்பட்டது.