நாமக்கல்லில் சரிந்த அதிமுக செல்வாக்கு: நகர்மன்றத் தலைவர் யார்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் நகராட்சி திமுக தனிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
நகராட்சி அலுவலக முகப்பு
நகராட்சி அலுவலக முகப்பு

நாமக்கல்: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் நகராட்சி திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட 37 வார்டுகளில் 36 இடங்களை பிடித்துள்ளது. திமுகவைச் சேர்ந்த இருவர் சுயேட்சையாக களம் கண்டு வெற்றிக்கு பின் திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் திமுகவின் பலம் 38-ஆக உள்ளது. அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நாமக்கல் நகராட்சியில் அதிமுக குறைந்தபட்சம் 12 வார்டுகளையாவது கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் எதிர்பாராமல் வெற்றியைப் பெற்றுள்ளது. அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, ஊதிய பிரசாரமின்மை, திமுகவின் பணம், பொருள் ஆட்கள் பலத்துக்கு இடையே சமாளிக்க முடியாமல் திணறியது போன்றவற்றைக் கூறலாம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியை திமுக கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து 9 மாதங்களாக மக்கள் பிரச்னையில் அதிமுகவினர் பெரிய அளவில் பங்கேற்காதது, திமுகவுக்கு எதிராக அரசியல் செய்யாதது, வேட்பாளர் நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் போன்றவை நாமக்கல் நகராட்சி திமுக வசம் சென்றதற்கு முக்கிய காரணிகளாகும்.

நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான பி.தங்கமணி தேர்தலுக்கு முன்பாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றி இருந்தார். இதனால் அவர் பெரிய அளவில் பிரசாரத்தில் ஈடுபாடு காட்டவில்லை. அதிமுக செல்வாக்குமிக்க திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் போன்ற இடங்களில் அதிமுக பெரும்பான்மை இழந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவை பலப்படுத்துவது அவசியமான ஒன்றாகும். இந்த நிலை தொடர்ந்தால் எதிர்வரும் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியை சந்திக்க நேரிடும். மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை அமைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாமக்கல் நகராட்சி தலைவர் பதவி

தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த சுற்றுலா துறை அமைச்சர் எம். மதிவேந்தனின் தந்தை மருத்துவர் மாயவன் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியில் இருந்தார்.

ஆனால் பதவியில் இருப்போரின் குடும்பத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என கட்சித் தலைமை அறிவித்ததால் அவர் பின்வாங்கி விட்டார். நாமக்கல் நகராட்சியை பொருத்தவரை 15, 30, 39 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொதுப் பிரிவிலும், 7, 8, 14, 28 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. 

பதவிக்கு நியமிக்கப்பட வாய்ப்பு உள்ள தேவராஜன்
பதவிக்கு நியமிக்கப்பட வாய்ப்பு உள்ள தேவராஜன்

தற்போது தலைவர் பதவி போட்டியில் 30வது வார்டை சேர்ந்த கலாநிதி, 39-ஆவது வார்டை சேர்ந்த தேவராஜன் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தேர்தலின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் அவரது தந்தை மாயவன் ஆகியோர் தேவராஜனுக்கு ஆதரவாக தீவிரமாக தேர்தல் பணியாற்றினர். இதனால் அவர் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. துணைத் தலைவராக திமுக நகர செயலாளர் பூபதி நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com