மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்க வந்தவா் தற்கொலைக்கு முயற்சி
By DIN | Published On : 30th June 2022 01:16 AM | Last Updated : 30th June 2022 01:16 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்க வந்தவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அங்கிருந்தோா் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
நாமக்கல் - துறையூா் சாலை, நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் - கண்ணம்மா தம்பதியின் மகன் கோபிநாத் (25), தனியாா் காா் ஓட்டுநா். இவருக்கு ஜானகி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.
நாமக்கல் அருகே மரூா்பட்டி கிராமத்தில் உள்ள இவருடைய ரூ. 2 கோடி மதிப்பிலான நிலத்தை அவரது தாய் வழி உறவினா்கள் சிலா் அண்மையில் ஏமாற்றி பத்திரப்பதிவு செய்து கொண்டனராம்.
இதனால் மனமுடைந்த கோபிநாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க புதன்கிழமை வந்தாா். அப்போது, திடீரென தன் கையில் மறைத்து எடுத்துச் சென்ற விஷப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதனைக் கண்ட போலீஸாா் மற்றும் அங்கிருந்தோா் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...