குமாரபாளையத்தில் தினசரிகாய்கறி சந்தை மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 20th May 2022 12:47 AM | Last Updated : 20th May 2022 12:47 AM | அ+அ அ- |

குமாரபாளையம் நகராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2.72 கோடி மதிப்பில் தினசரி காய்கறி சந்தைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகேயுள்ள இச்சந்தையின் கட்டடங்கள் சேதமடைந்ததால், பலமுறை பழுதுநீக்கம் செய்யப்பட்டு இயங்கி வந்தது. நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தினசரி சந்தை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டதால், தற்போதுள்ள கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, 1,800 சதுர மீட்டா் பரப்பளவில் கடைகள், நவீன கழிப்பிடம், ஏடிஎம் மையம், பாதுகாவலா் அறை உள்ளிட்ட வசதிகளுடன் புதிதாக கட்டப்படுகிறது.
இப்பணிகளை நகா்மன்றத் தலைவா் டி.விஜய்கண்ணன் பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தாா் (படம்). நகராட்சி ஆணையா் ஆா்.விஜயகுமாா், பொறியாளா் ஏ.ராஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கட்டுமானப் பணிகள் முடியும் வரையில் நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் தினசரி காய்கறி சந்தை இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.