நாய்ப் பாசம்! விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்ற போராடிய நாய்கள்

வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நண்பனை காப்பாற்றுமாறு, பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சாலையில் சென்றோரை குரைத்தபடி அழைத்த நிகழ்வினை பார்த்தோர் செய்வதறியாது
நாமக்கல்-சேலம் சாலையில் விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்ற போராடிய நாய்கள்.
நாமக்கல்-சேலம் சாலையில் விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்ற போராடிய நாய்கள்.

வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நண்பனை காப்பாற்றுமாறு, பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சாலையில் சென்றோரை குரைத்தபடி அழைத்த நிகழ்வினை பார்த்தோர் செய்வதறியாது வேதனையில் கண்கலங்கினர். 

நாமக்கல்-சேலம் சாலை வாகனப் போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதி. இங்கு பேருந்து, லாரி, கார், இரு சக்கர வாகனங்கள் என நொடிக்கு நூறு எண்ணிக்கையில் அங்கும், இங்குமாக பறந்தபடி இருக்கும். இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் சாலையை கடக்க முயன்ற நாய் முகத்தின் மீது காரின் முன்பகுதி மோதியது. 

அந்த கார் நிற்காமல் சென்ற நிலையில், சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது நண்பனை கண்டு அவ்வழியாக சென்ற பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் அதனருகில் வந்து குரைத்தபடியும், கால்களால் அதனை தட்டியெழுப்பியவாறும், யாராவது உதவிக்கு வரமாட்டீர்களா என சாலையில் செல்வோரை பார்த்தபடியும் இருந்த காட்சி அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது.

காயமடைந்த நாயை மீட்டுச் சென்று சிகிச்சை அளிக்கும் இளைஞர்கள்.

அப்போது இளைஞர்கள் சிலர் விபத்தில் சிக்கிய நாயை மீட்டு சாலையோரம் உள்ள நடைப்பாதையில் வைத்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அதிகப்படியான ரத்தப்போக்கால் சிறிது நேரத்தில் நாய் இறந்து விட்டது. காக்கை, குரங்குகள் எவ்வாறு தங்களுடைய இனத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் சுற்றி நின்று குக்குரலிடுமோ, அதேபோல் நாய்களும் குரைத்தபடி உதவி கேட்டு அழைத்த நிகழ்வு மக்களிடத்தில் வேதனையை அளித்தது.

மனிதர்களாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. ஆனால் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கேட்பாரில்லை; கண்டுகொள்வாரில்லை. வாகனத்தில் அடிபட்ட நேரத்தில் மீட்டுச் சென்று சிகிச்சை அளித்திருந்தால் நாய் பிழைத்திருக்கும். மனிதர்களைப் போல், விலங்கினங்களுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கும் வகையிலான ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு தொடங்க வேண்டும் என காயமடைந்த நாயை மீட்டுச் சென்று முதலுதவி அளித்த தன்னார்வலர்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com