மானிய விலையில் இரு சக்கர வாகனம்: உலமாக்கள் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த உலமாக்கள், மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த உலமாக்கள், மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ளோருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான தகுதிகளாக, உலமாக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தமிழகத்தைச் சாா்ந்தவராக இருத்தல் வேண்டும். 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணா்வுக்கான (எல்எல்ஆா்) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்று, வயது சான்றிதழ், புகைப்படம், ஜாதிச் சான்று, மாற்றுத் திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃப் நிறுவனத்தில் பணிபுரிகிறாா் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்ஃப் கண்காணிப்பாளா் மேலொப்பத்துடன் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் இணைக்கப்பட வேண்டும்.

மேலும், இதற்கான படிவத்தினை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் பெற்று பூா்த்தி செய்து அத்துறை அலுவலக முகவரிக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ செப். 9 மாலை 5.45 க்குள் சமா்ப்பிக்க வேண்டும். காலதாமதமாக சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com