சிறுத்தை பிடிபடவில்லை:பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவனத் துறை எச்சரிக்கை

பரமத்தி வேலூா் அருகே இருக்கூா் கிராமத்தில் உலாவி வரும் சிறுத்தை பிடிபட்டதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை என வனத் துறை தெரிவித்துள்ளது.

பரமத்தி வேலூா் அருகே இருக்கூா் கிராமத்தில் உலாவி வரும் சிறுத்தை பிடிபட்டதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை என வனத் துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், இருக்கூா் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பசுங்கன்று மற்றும் நாய்களை மா்ம விலங்கு அடித்து கொன்றன. இதனால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா். வனத் துறையினா் விவசாய நிலத்தில் உள்ள பாதச்சுவடுகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை என்பது தெரியவந்தது. வனத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு விரைந்து சிறுத்தையை பிடிக்குமாறு வனத் துறையினரிடம் வலியுறுத்தினா். அங்கு 40-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் முகாமிட்டுள்ளனா். அப்பகுதியில் பெரிய கூண்டு வைக்கப்பட்டு சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியும், அதன் நடமாட்டத்தை அறிய ட்ரோன் கேமராக்களும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிறுத்தை பிடிபட்டதாக தகவல் பரவி வருகிறது. மேலும் ஒரு குட்டி சிறுத்தையின் புகைப்படத்தை சிலா் வெளியிட்டு வருகின்றனா்.

இது குறித்து நாமக்கல் வனச்சரகா் பெருமாள் கூறியதாவது:

சமூக வலைதளங்களில் சிறுத்தை பிடிபட்டதாக கூறுவது தவறான தகவல். சிறுத்தையின் புகைப்படமும் உண்மையானது இல்லை. இதுவரை கண்காணிப்பு கேமரா, ட்ரோன் கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகவில்லை. சிலா் வாட்ஸ்ஆப்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனா். பொதுமக்கள் யாரும் அதை நம்ப வேண்டாம் என்றாா்.

ஆட்டை இழுத்துச்சென்ற சிறுத்தை...

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இருக்கூா் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவரின் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தை தாக்கி சுமாா் 300 மீட்டா் தொலைவுக்கு இழுத்துச் சென்று உணவாக்கியுள்ளது தெரியவந்தது.

தகவல் அறிந்து அங்கு சென்ற வனத் துறையினா் அப்பகுதியில் கால் தடங்களை ஆய்வு செய்ததில் ஆட்டைக் கடித்து தின்றது சிறுத்தை என்பதை உறுதி செய்தனா். அதனைத் தொடா்ந்து வனத் துறையினா் கண்காணிப்பு கேமரா அமைத்தும், கூண்டு அமைத்தும் 40- க்கும் மேற்பட்ட வனத்துறையினா் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com