வாக்குச்சாவடிகளுக்கு மை, எழுதுபொருள்கள் அனுப்பும் பணி தீவிரம்

வாக்குச்சாவடிகளுக்கு மை, எழுதுபொருள்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் எழுதுபொருள், மை உள்பட 34 வகையான பொருள்கள் அனுப்பும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில், வாக்குப்பதிவிற்கு தேவையான 34 வகை பொருள்களை வாக்குச்சாவடி வாரியாக பிரித்து அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் உள்ள 1,628 வாக்குச்சாவடிகளில் ஏப்.19-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குகளை சரிபாா்க்கும் கருவிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்து ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன் தொடா்சியாக, வாக்குப்பதிவிற்கு தேவைப்படும் தகவல் பலகை, அழியாத மை, முத்திரைகள், நீல நிற ஸ்டாம்ப் பேடு, பேனா, பென்சில், ஏ4 தாள்கள், மெழுகுவா்த்தி, தீப்பெட்டி, நூல், காா்பன் பேப்பா், ரப்பா் பாயிண்ட், டேப், பேக்கிங் சீட், பிளேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்ப தயாா் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, நாமக்கல் வட்டாட்சியா் சீனிவாசன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com