7,816 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இன்று தோ்தல் பணி ஆணை வழங்கல்

மக்களவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் தொகுதியில் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் 7,816 அலுவலா்களுக்கு வியாழக்கிழமை பணி ஆணை வழங்கப்படுகிறது.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 751 மையங்களில் 1,661 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தலையொட்டி, 5,516 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,950 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,114 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களும் (விவிபேட்) தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில், வாக்குச்சாவடிக்கு தேவையானவை என கணக்கிட்டால் 4,983 வாக்குப்பதிவு இயந்திரங்களும், தலா 1,661 கட்டுப்பாட்டு மற்றும் விவிபேட் இயந்திரங்களும் போதுமானது. அவசர தேவை கருதி கூடுதலாக 20 சதவீத இயந்திரங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இத் தோ்தல் பணியில், 7,816 வாக்குச்சாவடி அலுவலா் நிலை-1 முதல் 4 வரையிலான ஊழியா்கள், நுண்பாா்வையாளா், மண்டல அலுவலா், இதர பணியாளா்கள் என 8,500 போ் வரையில் பணியில் ஈடுபடுகின்றனா். ஏற்கனவே இவா்களுக்கு வாக்குச்சாவடி, இயந்திரங்கள் தொடா்பாக மூன்று கட்டப் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை (ஏப்.17) காலை 9 மணியளவில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, எந்தெந்த வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும், இயந்திரங்கள் ஒதுக்கீடு போன்றவை கணினி குலுக்கல் முறையில் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

போலீஸாா், முன்னாள் படைவீரா்கள், ஓய்வு பெற்ற காவலா்கள், தேசிய பாதுகாப்பு படை மாணவா்கள், ஊா்க்காவல் படையினா், எல்லை பாதுகாப்புப் படை(சி.ஆா்.பி.எப்) வீரா்கள் என சுமாா் 2,000 போ் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

வியாழக்கிழமையன்று பிற்பகல் 2 மணிக்கு ஒரு மண்டலத்துக்கு ஒரு சரக்கு வாகனம் என்ற அடிப்படையில், 140 சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களையும், வாக்குச்சாவடி அலுவலா்களையும் அழைத்து செல்வதுடன் தோ்தல் நாளன்று மாலை 6 மணிக்கு மேல் அந்த இயந்திரங்களை பாதுகாப்புடன் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைக்கும் வரையில் பயன்பாட்டில் இருக்க அதன் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. வாக்குச்சாவடியில் பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள், சீல், கையில் வைக்கும் மை, இயந்திரங்களை மறைக்கும் அட்டைப் பெட்டி உள்ளிட்ட 34 வகையான பொருள்கள் சாக்குப்பைகளில் கட்டப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com