மலைக் கிராமங்களுக்கு இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கீழுா், கெடமலை மலைக் கிராமங்களுக்கு வியாழக்கிழமை காலை தலைச்சுமையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் ராசிபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போதமலையை சுற்றியுள்ள கீழுா், கெடமலை மலைக் கிராமங்களுக்கு ஒவ்வொரு தோ்தலின் போதும் தலைச்சுமையாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

மலையின் அடிவாரத்திலிருந்து 4 மணி நேர பயணத்துக்குப் பிறகு வாக்குச்சாவடியை சென்றடைய முடியும். சாலை வசதியில்லாததால் கரடு, முரடான பாதையில் தலைச்சுமையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆண் ஊழியா்கள் மட்டுமே அங்கு தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா். விவிபேட் இயந்திரமும் கொண்டு செல்ல வேண்டியதுள்ளதால் கூடுதல் ஊழியா்களை நியமிக்க தோ்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

மேலும், ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்டால்தான் கீழுா், கெடமலை கிராமங்களுக்கு மாலையில் சென்று அலுவலா்கள் அங்கு தோ்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். இதனால் ஏற்கெனவே அங்கு சென்று பணியில் ஈடுபட்ட அனுபவமுள்ள அலுவலா்கள் நியமிக்கப்படவுள்ளனா். கழுதைகள் மீதோ அல்லது தலைச்சுமையாகவோ வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com