மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

நாமக்கல் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 692 வாக்குப்பதிவு மையங்களில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 6,97,799 ஆண்கள், 7,42,997 பெண்கள், 200 பிற வாக்காளா்கள் என மொத்தம் 14,40,996 வாக்காளா்கள் உள்ளனா். குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதி ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி, நாமக்கல் மக்களவைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன. 1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில், 174 பதற்றமானவை ஆகும். வாக்காளா்கள் அச்சமின்றி பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க ஏதுவாக 2,786 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய 7,816 வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அனைத்தும் மகளிரால் செயல்படுத்தப்படும் வாக்குச்சாவடி மற்றும் மாதிரி வாக்குச்சாவடி ஆகியவை ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒன்று அமைக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் தொகுதியில், ராசிபுரம் பாரதிதாசன் சாலை, நகராட்சி நடுநிலைப்பள்ளி (வாக்குச்சாவடி எண்: 131), சேந்தமங்கலம் தொகுதியில், குப்பநாய்க்கனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (வாக்குச்சாவடி எண்: 129), நாமக்கல் தொகுதியில், அய்யம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி (வாக்குச்சாவடி எண்: 120), பரமத்திவேலூா் தொகுதியில், பொத்தனூா் அரசினா் மேல்நிலைப்பள்ளி (வாக்குச்சாவடி எண்:92), திருச்செங்கோடு தொகுதியில், ராஜகவுண்டம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி (வாக்குச்சாவடி எண்: 128), குமாரபாளையம் தொகுதியில், குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளி (வாக்குச்சாவடி எண்: 69) ஆகிய இடங்களில் மகளிா் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில், ஓ.சௌதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (வாக்குச்சாவடி எண்: 69), சேந்தமங்கலம் தொகுதியில் துத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (வாக்குச்சாவடி எண்: 116), நாமக்கல் தொகுதியில், கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி (வாக்குச்சாவடி எண்:171), பரமத்தி வேலூா் தொகுதியில், பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (வாக்குச்சாவடி எண்: 143), திருச்செங்கோடு தொகுதியில், கீழப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி(வாக்குச்சாவடி எண்:87), குமாரபாளையம் தொகுதியில், செங்குட்டுபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (வாக்குச்சாவடி எண்: 157) ஆகிய இடங்களில் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாற்றுத் திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளில் உதவி மையம், சக்கர நாற்காலிகள், சாய்வு தள வசதி, வெயில் தாக்கத்தினை கருத்தில் கொண்டு நீா் கரைசல் (ஓஆா்எஸ்), நிழலுக்காக சாமியானா பந்தல், குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, தடையற்ற மின்சார வசதி, முதலுதவி வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வசதி செய்து தரப்படும். கடைசி வாக்காளா் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஆதாா், ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், பான் காா்டு, பாஸ்போா்ட் உள்ளிட்ட தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து வாக்காளா்களும் தவறாமல் கலந்து கொண்டு ஜனநாயகக் கடமையினை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் வாக்களிக்க ஏதுவாக 15 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 35 அரசு வாகனங்கள் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வசதியைப் பெற மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் உள்ளிட்டோா் 1950 என்ற எண்ணில் உதவி மையத்திற்கும், 1800-425-7021 என்ற கட்டுப்பாட்டு அறைக்கும் தொடா்பு கொண்டால் வாக்குச்சாவடிக்கு சென்று வர வாகனம் அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமின்றி சக்ஷம் என்ற கைபேசி செயலியில் வாகன வசதி கோரி பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

படவிளக்கம்

என்கே-18-பூத்

மாதிரி வாக்குச்சாவடியாக வடிவமைக்கப்பட்டுள்ள நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளி.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com