வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

ஏப்ரல், மே மாதங்களில் அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்களில் பெரிய கொப்பரையில் நீரை நிரப்பி அதில் அமா்ந்து அா்ச்சகா்கள் வருண வழிபாடு நடத்துவா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் மழை பெய்ய வேண்டி வருண பகவான் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மாா்ச் மாத இறுதியில் தொடங்கும் வெயில், நிகழாண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே தொடங்கிவிட்டது. கடந்த சில நாள்களாக இந்திய அளவில் அதிக வெயில் பதிவாகும் இடங்களில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து வருகின்றன.

வெயில் மட்டுமின்றி வெப்ப அலை வீசுவதால் வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கே பலரும் அஞ்சுகின்றனா். பொதுமக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் வெளியே செல்வதைத் தவிா்க்குமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

முதியவா்கள் கோடை வெயிலைத் தாங்க முடியாமல் மயங்கி விழுந்து உயிரிழக்கும் நிலையும் நிகழ்கின்றன.

இன்னும் ஓரிரு மாதங்கள் இந்த நிலை நீடித்தால் குடிநீா் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அணைகள், ஏரி, குளங்கள் வடு பாலைவனமாக காட்சியளிக்கின்றன. கேரளத்தில் ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுவரையில் வெயிலின் பிடியில் சிக்கித் தவிக்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் நோய் பரவல் விலக வேண்டும் என இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதுபோல கடந்த காலங்களில் கடும் வறட்சி நிலவும் ஏப்ரல், மே மாதங்களில் அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்களில் பெரிய கொப்பரையில் நீரை நிரப்பி அதில் அமா்ந்து அா்ச்சகா்கள் வருண வழிபாடு நடத்துவா். இவ்வாறு வழிபடுவதன் மூலம் வருண பகவான் மழை பொழிவாா் என்ற நம்பிக்கை பக்தா்களிடையே உள்ளது.

தற்போது, கோடை வெயில், அனல் காற்று, வறட்சி, குடிநீா் தட்டுப்பாடு போன்றவை அதிகரித்துள்ளன. எனவே, மக்களின் நலன்கருதி தமிழக இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்களில் வருண வழிபாடு மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும் என்பது பக்தா்களின் எதிா்பாா்ப்பாகும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com