ஓய்வுபெற்ற நடத்துநா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாமக்கல் அருகே ஓய்வுபெற்ற நடத்துநா் வீட்டில் பீரோவை உடைத்து 35 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், நல்லிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வசிப்பவா் பத்மநாபன் (65). ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துநா். இவருடைய மகன் தனசேகரன், அவரது மனைவி மேனகா, மற்றொரு மகன் தினேஷ் குமாா், அவரது மனைவி கிருத்திகா ஆகியோா் மோகனூா் அருகே அணியாபுரத்தில் உள்ள மூங்கில்பட்டியில் உள்ள கோயில் திருவிழாவுக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றனா்.

மீண்டும் மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 35 பவுன் நகை திருட்டுப் போனது கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து, நல்லிபாளையம் காவல் நிலையத்தில் பத்மநாபன் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சுமதி சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினாா். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீஸாா் பாா்வையிட்டனா். வீட்டில் இருந்து அனைவரும் திருவிழாவுக்குச் செல்வதை அறிந்தே மா்ம நபா்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளனா். பத்மநாபன் குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்தவா்கள்தான் திட்டமிட்டு இந்தத் திருட்டை அரங்கேற்றியிருக்க வாய்ப்புள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com