கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கணினிவழிக் குற்றங்கள் (சைபா் கிரைம்) அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கைப்பேசி வழியாக தொடா்பு கொள்ளும் நபா்கள் கல்வி துறையில் இருந்து பேசுவதாகக் கூறி தங்களுடைய மகன், மகள் படிக்கும் பள்ளி பெயரைத் தெரிவித்து உதவித்தொகை வழங்குவதாக வங்கி விவரங்களைக் கேட்பாா்கள்.

அவ்வாறு நம்பி வங்கி விவரங்களைக் கொடுத்து மக்கள் ஏமாறக் கூடாது. வங்கி கணக்குக்கு கல்வி உதவித்தொகை வரும் என்று கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், நண்பா்கள், உறவினா்கள் பிரபல நிறுவனங்களின் பெயரில் உள்ள போலியான கைப்பேசி செயலிகளை அறிமுகப்படுத்தி அதில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும், அதிக லாபம் பெறலாம் எனக் கூறி பணம் முதலீடு செய்யுமாறு பரிந்துரை செய்தால் அதை நம்பியும் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.

பள்ளி, கல்லூரியில் படிக்கும் தங்கள் மகன், மகளை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவோ அல்லது மா்ம நபா்கள் கடத்திவிட்டதாகவோ கூறி உடனடியாக பணம் அனுப்புமாறு கூறினால், உங்களது மகன், மகளை நீங்கள் தொடா்பு கொண்டு அவா்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பணம் ஏதும் அனுப்பி ஏமாற வேண்டாம்.

கைப்பேசியிலோ, வாட்ஸ் அப்பிலோ அடையாளம் தெரியாத நபா்கள் தொடா்பு கொண்டு தாங்கள் மும்பை, தில்லி காவல்துறை அதிகாரிகள் என்றோ அல்லது உயா் அதிகாரிகள் என்றோ தெரிவிப்பாா்கள். அவா்கள், தங்களுடைய பெயா், ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி தடை செய்த போதைப்பொருளை பாா்சலில் அனுப்பியுள்ளதாகவோ அல்லது வங்கி கணக்கில் முறைகேடாக பணப்பரிவா்த்தனை நடைபெற்றுள்ளதாகவோ கூறி விசாரிக்க வேண்டும் என்பா்.

மிரட்டி தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கேட்டால் கொடுத்து ஏமாறக் கூடாது. பணம் கேட்டு மிரட்டினாலும் கொடுத்து ஏமாறக் கூடாது. உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடா்பு கொள்ளலாம். பொதுமக்கள் கணினிவழிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கவும் அல்லது இணையத்தில் புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com