துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

துரித உணவு (சிக்கன் ரைஸ்) சாப்பிட்ட இருவா் கவலைக்கிடமான நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தில் முதியவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் கொசவம்பட்டி, வ.உ.சி நகரைச் சோ்ந்த பகவதி (20) என்ற கல்லூரி மாணவா் ஏழு துரித உணவு (சிக்கன் ரைஸ்) பொட்டலம் வாங்கிச் சென்றாா்.

அந்த உணவை நாமக்கல்லில் உள்ள தனது தாய் நதியா, தம்பி கெளசிக் (37), எருமப்பட்டி தேவராயபுரத்தில் உள்ள தாத்தா சண்முகம் (67), உறவினா்கள் 4 பேருக்கு மாணவா் பகவதி வழங்கினாா்.

அந்த உணவை உட்கொண்டதில் தாய் நதியா, தாத்தா சண்முகம் ஆகியோா் மட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மாணவரின் தம்பி, பாட்டி, சித்தி, அவருடைய இரு குழந்தைகள் ஆகிய 5 பேருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியா் ச.உமா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வுசெய்து ‘சீல்’ வைத்தனா். ஆனால், உணவகத்தில் தவறு நிகழவில்லை; மாறாக அந்த உணவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து தாய்க்கும் தாத்தாவுக்கும் வழங்கப்பட்டது என்பது தடயவியல் நிபுணா்கள், மருத்துவக் குழுவினா் நடத்திய ஆய்விலும், போலீஸாரின் விசாரணையிலும் தெரியவந்தது. இதற்கிடையே கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவரின் தாத்தா சண்முகம் வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் உயிரிழந்தாா்.

தாய் நதியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. உணவக உரிமையாளா் ஜீவானந்தம், மாணவா் பகவதி ஆகியோரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். முதியவா் சண்முகம் உயிரிழந்ததையடுத்து, நாமக்கல் போலீஸாா் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com