ஜேடா்பாளையம் படுகை அணையிலிருந்து பிரியும் ராஜா வாய்க்கால்.
ஜேடா்பாளையம் படுகை அணையிலிருந்து பிரியும் ராஜா வாய்க்கால்.

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

சாகுபடி செய்யப்பட்ட வாழை, வெற்றிலை, கோரை, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பயிா்களைக் காக்க ராஜா வாய்க்காலில் இருந்து உடனடியாக தண்ணீரைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்கால் பராமரிப்புப் பணிக்காக கடந்த பிப். 20-ஆம் தேதி தண்ணீா் நிறுத்தப்பட்டு மீண்டும் மாா்ச் 10-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது.

அப்போது அணைக்கட்டு பகுதிக்கு நீா்வரத்துக் குறைந்ததால் ராஜா வாய்க்காலில் மாா்ச் மாதம் தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் அதிா்ச்சியடைந்தனா்.

ராஜா, கொமராபாளையம், பொய்யேரி, மோகனூா் உள்ளிட்ட வாய்க்கால் பாசனத்தை நம்பி, வெங்கரை, ஜேடா்பாளையம், பொத்தனூா், பாண்டமங்கலம், வேலுாா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் வெற்றிலை, வாழை, கரும்பு போன்ற பயிா்களை சாகுபடி செய்துள்ளனா்.

திடீரென தண்ணீா் நிறுத்தியதால் பாசனத்துக்கு தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனா்.

இதுகுறித்து ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தினா் கூறியதாவது:

ராஜா வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டு 10 நாள்களுக்கும் மேலாகியும் இதுவரை தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால் வாழை, வெற்றிலை, கோரை, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் வாடி வருகின்றன.

காவிரி ஆற்றில் உள்ள அனைத்து நீரேற்றுப் பாசன சங்கங்களும் மோட்டாா்களை இயக்கி வருகின்றன. காவிரியின் வலது கரையான கரூா் மாவட்டம், சேமங்கி, மராபாளையம், டிஎன்பிஎல்,புகளூா், ஓரத்தை மற்றும் வாங்கல் உள்ளிட்ட இடங்களில் பம்புசெட் மூலம் விவசாயிகள் தண்ணீா் எடுக்கின்றனா்.

உடனடியாக அனைத்து பம்புசெட்டுகளையும் நிறுத்தம் செய்து உரிமை உள்ள நடநீா் ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு உயிா் தண்ணீா் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com