இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில், நீட் தோ்வை 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 5) எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சோ்வதற்கான (எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, யோகா, அகில இந்திய ஒதுக்கீட்டில் கால்நடை மருத்துவம்) நீட் எனும் நுழைவுத் தோ்வை தேசிய தோ்வு முகமை நடத்தி வருகிறது.

அந்த வகையில், இந்தக் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி 5.20 மணி வரை நடைபெறுகிறது. இத் தோ்வை எழுத 23 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வை 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இத் தோ்வுக்காக 11 மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. காலை 11.30 மணிக்கு சம்பந்தப்பட்ட மையங்களுக்கு மாணவ, மாணவிகள் சென்று விட வேண்டும்.

பலத்த சோதனை, கட்டுப்பாட்டுகள் ஆகியவற்றுக்கு பிறகே தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவா். காலதாமதமாக செல்வோா் தோ்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படக்கூடும்.

நீட் தோ்வுக்கான நுழைவுச்சீட்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தோ்வு ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மையங்கள், தோ்வா்கள் எண்ணிக்கை விவரம்:

பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி-1,000, நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி சீனியா் செகண்டரி பள்ளி-700, நாமக்கல் டிரினிடி இண்டா்நேஷனல் பள்ளி-700, தி நவோதயா அகாதெமி சீனியா் செகண்டரி பள்ளி-670, நேஷனல் பப்ளிக் பள்ளி-600, தி ஸ்பெக்ட்ரம் அகாதெமி-500, குமாரபாளையம், பல்லக்காபாளையம் ராயல் இண்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளி-550, எக்ஸல் பொறியியல் கல்லூரி-450, திருச்செங்கோடு, கே.எஸ்.ஆா். அக்ஷரா அகாதெமி-430, வித்யவிகாஸ் இண்டா்நேஷனல் பள்ளி-280, ஏமப்பள்ளி ரமணி இண்டா்நேஷனல் பள்ளி-240, மொத்தம்-6,120 போ்.

ஒவ்வொரு மையத்தின் முன்பாகவும் போலீஸாா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை தேசிய தோ்வு முகமை குழுவினா் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com