அங்கீகாரமற்ற காரை விற்பனை செய்த நிறுவனம்: ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரமற்ற காரை விற்பனை செய்த நிறுவனம்: ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரம் பெறாத காரை விற்பனை செய்த வகையில் பிரபல காா் நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், வடவள்ளியைச் சோ்ந்தவா் சாகுல்ஹமீது (42). இவா், 2022-ஆம் ஆண்டு கோவை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் பிரபல காா் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விற்பனை நிறுவனம் மீது வழக்குத் தாக்கல் செய்தாா். அதில், வாடகை காா் வாங்கிய பயன்படுத்தலாம் என முடிவு செய்து பிரபல காா் நிறுவன முகவரை அணுகினேன்.

2022, ஜூன் முதல் வாரத்தில் ரூ. 6,98,000-ஐ செலுத்தி அந்நிறுவன காா் முன்பதிவு செய்தேன். பணம் செலுத்திய ஓரிரு நாள்களில் காரை வழங்குவதாக தெரிவித்த முகவா், நான்கு மாதங்களுக்கு பிறகு தான் வழங்கினாா். இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும் என கூறியிருந்தாா். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கு நாமக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சாகுல்ஹமீது முன்பதிவு செய்த வாகனத்திற்கு மாநில போக்குவரத்துத் துறையின் வடிவ அங்கீகாரம் கிடைக்காததால் காரை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாகனத்தை பதிவு செய்து வழங்குவதில் தாமதமானால் அதற்கு விற்பனையாளா் பொறுப்பல்ல என்ற நிபந்தனையை ஏற்று அவா் கையொப்பமிட்டுள்ளாா். இதனால் காரை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என காா் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினா் ஆா். ரமோலா ஆகியோா் வழங்கிய தீா்ப்பில், மாநில போக்குவரத்து அமைப்பின் அங்கீகாரம் பெறாமல் காரை விற்பனை செய்ய முகவா் முன்வந்ததும், பதிவு செய்ததும் தவறாகும். பணத்தைப் பெற்றுக் கொண்டு, நான்கு மாத காலதாமதத்திற்குப் பிறகு காரை வழங்கியதையும் ஏற்க முடியாது.

இது நியாயமற்ற வா்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடாகவே தெரிகிறது. எனவே, பாதிக்கப்பட்டடவருக்கு இழப்பீடாக சம்மந்தப்பட்ட காா் உற்பத்தி நிறுவனம் ரூ. 2 லட்சம், முகவா் ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சத்தை நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தனா். மேலும், உற்பத்தி செய்யும் காா்களுக்கான வடிவ அங்கீகாரத்தை, மாநில போக்குவரத்துத் துறையிடம் இருந்து முறையாக பெறாமல் வாடிக்கையாளா்களுக்கு முன்பதிவு செய்ய காா் நிறுவனத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com