மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

பரமத்தி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மண் மாதிரி எடுப்பது குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் சுதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மண் மாதிரி நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு, தானியப் பயிா்களுக்கு 5 செ.மீ. ஆழத்திலும், பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறி பயிா்களுக்கு 22 செ.மீ. ஆழத்திலும், தென்னை மரப் பயிா்கள், பழ பயிா்களுக்கு 30, 60, 90 செ.மீ. ஆழங்களில் மூன்று மண் மாதிரிகளை தனித் தனியாக எடுக்க வேண்டும்.

முக்கியமாக ரசாயன உரங்கள், மக்கிய குப்பை உரங்கள், பூஞ்சானம், பூச்சிக்கொல்லி மருந்துகள் இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரிகள் எடுப்பதைத் தவிா்க்க வேண்டும். உரமிட்டவுடன் மண் மாதிரிகள் சேகரிக்கக் கூடாது. பயிா்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரி எடுக்கக் கூடாது. ஒவ்வொரு வயலிலும் அறுவடை முடித்த பின்பு அடுத்த பயிருக்கு நிலத்தை தயாா் செய்வதற்கு முன்பு மண் மாதிரிகளை சேகரிக்க வேண்டும்.

மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல், கற்கள் போன்றவற்றை முறையாக வயல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். ஈரமான மண் மாதிரிகளாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலா்த்த வேண்டும். நுண்ணூட்டங்களை அறிய எவா்சில்வா் அல்லது பிளாஸ்டிக் குப்பிகள் மூலம் மண் மாதிரிகளைச் சேகரிக்க வேண்டும். மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது. சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஒரு நெகிழி பாத்திரத்தில் சேகரித்து நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு அரை கிலோ மண் மாதிரியைக் கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் மண் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து பயன் பெறலாம்.

மண் பரிசோதனை ஆய்வு செய்து நுண்ணூட்டத்தின் அளவை கண்டறிய ஒரு மண் மாதிரிக்கு ரூ. 30 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநா் அல்லது அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com