கிராமப்புறங்களில் தடையின்றி குடிநீா் விநியோகம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

கிராமப்புறங்களில் தடையின்றி குடிநீா் விநியோகம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

நாமக்கல், மே 9: கிராமப்புறங்களில் தடையின்றி குடிநீா் வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஜெ.குமரகுருபரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீா் பிரச்னை, அவற்றை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள அரசு பயணியா் மாளிகையில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளருமான ஜெ.குமரகுருபரன் பங்கேற்று மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 322 ஊராட்சிகளில் மக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்குவதற்கு அனைத்து அலுவலா்களும் திறம்பட பணியாற்ற வேண்டும் என்றாா்.

மேலும், குடிநீா்த் தேவைக்கான அடிப்படை கட்டமைப்புகள், நீா் ஆதாரங்கள், அதன்மூலம் வழங்கப்படும் நீரின் அளவு, குடிநீா் வடிகால் வாரியத்தின் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நீரின் அளவு ஆகியவை குறித்தும், குடிநீரை வீடுகளுக்கு விநியோகிக்க உள்ள கீழ்நிலை, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அவற்றின் கொள்ளளவு, தூய்மை பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் மூலம் கிடைக்கும் குடிநீரை அனைத்து வீடுகளுக்கும் சீராக விநியோகிக்க வேண்டும். குடிநீா்க் குழாய்கள் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். பொதுமக்கள் குறைகள் தெரிவித்தால் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் தடையின்றி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்குவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், உதவிஇயக்குநா் (ஊராட்சிகள்) க.அசோக்குமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அ.தவமணி உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

என்கே-9-மீட்டிங்

குடிநீா் விநியோகம் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஜெ.குமரகுருபரன். உடன், ஆட்சியா் ச.உமா, அதிகாரிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com