சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்நாடன் காலமானார்

மொழி பெயர்ப்புக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும், படைப்பாளியுமான ஆ.தமிழ்நாடன் (71), சேலம் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.

மொழி பெயர்ப்புக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும், படைப்பாளியுமான ஆ.தமிழ்நாடன் (71), சேலம் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.

அவருக்கு கலைவாணி என்ற மனைவியும் ரம்யா என்ற மகளும் உள்ளனர்.

சேலம் மாவட்டம், பாரப்பட்டியை அடுத்துள்ள ஏர்வாடியில் ஆறுமுகம்- இருசாயம்மாள் தம்பதியின் மகனாக பிறந்த சுப்பிரமணியன் (எ) தமிழ்நாடன் தனது 15-ஆவது வயது முதல் கவிதை, கட்டுரை, கதைகள் எழுதத் தொடங்கினார்.

பட்டப் படிப்பை முடித்து ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், பெரியார்- மார்க்சிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள், பரமத்தி அப்பாவு, கெட்டி முதலி அரசர்கள் என்ற ஆய்வு நூல்களையும், வேள்வி, மண்ணின் மாண்பு, காமரூபம், அம்மா அம்மா, நட்சத்திரப் பூக்கள், தமிழ்நாடன் கவிதைகள் ஆகிய கவிதை நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.

ஒரு வானம்பாடியின் இலக்கிய வானம், தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகம், சேலம் கலையும்- இலக்கியமும், என் மொழி - என் மக்கள் - என் நாடு, புதுமையின் வேர்கள், எழுத்தென்ப, கலைகள் உறவும் உருமாற்றமும், உயிர் ஒன்று உடல் நான்கு, சாகித்ய அகாதெமி தமிழ் விருதுகள் சில விவரங்கள் விசாரங்கள், சேலம் திருமணிமுத்தாறு, திருக்குறள் புதிர்கள் போன்ற கட்டுரை தொகுப்புகளையும் தமிழ்நாடன் எழுதியுள்ளார்.

சாரா என்ற புதினத்தையும், மசா நிவேதனம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ள தமிழ்நாடன், மனு தர்மம், சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம், ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும், ஜப்பானிய கவிதைகள் ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.

இதில் ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் என்ற ஒரிய மொழிபெயர்ப்பு நூலுக்கு 2000-ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி ஆய்வு மைய இயக்குநராக இருந்த தமிழ்நாடன், சேலம் ஓவியர்- எழுத்தாளர்கள் மன்றத்தின் செயலர், தமிழ்நாடு அரசு வரலாற்று ஆவண ஆய்வுக் குழுவின் மண்டல உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார்.

சேலம் ஆவணக் காப்பகம் அலுவலகம் வரக் காரணமானவர்களில் ஒருவரான இவர், மாணவர்களுக்கு தமிழர்ப் பண்பாட்டு வரலாற்று ஆய்வரங்குகள், வரலாற்று மூலங்களை பாதுகாத்தல், கற்பித்தல் குறித்து பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தியுள்ளார்.

பாவேந்தரின் படைப்பான குமரகுருபரன் (1944) என்ற நாடகத்தின் மூலப் பிரதியைக் கண்டுபிடித்து முதல்முறையாக கடந்த 2000-ஆம் ஆண்டில் அச்சேற்றிய இவர், சாகித்ய அகாதெமி விருதுடன் பாவேந்தர் விருது, சிற்பி விருது போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ்நாடனின் உடல் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் ஜான்சன்பேட்டையில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com