மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு எதிரொலி: 4,000 மீனவர்கள் பாதிப்பு; பலர் ஊரைக் காலி செய்யும் அவலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டதால், அணையில் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் மீனவர்கள் 4 ஆயிரத்துக்கும்
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு எதிரொலி: 4,000 மீனவர்கள் பாதிப்பு; பலர் ஊரைக் காலி செய்யும் அவலம்
Published on
Updated on
1 min read

மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டதால், அணையில் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் மீனவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். பலர் பிழைப்புக்காக வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் மேட்டூர் பகுதி களையிழந்து வருகிறது.
 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது மேட்டூர் அணை நீர்தேக்கம். இதில் கட்லா, ரோகு, மிர்கால், அரஞ்சான், திலேபி, கறிமீன், கெண்டை, கெழுத்தி, ஆரால், வாழை உள்ளிட்ட பல வகை மீன்கள் உள்ளன.
 மேட்டூர் மீன்கள் சுவை மிகுந்தது என்பதால், தமிழகம் மட்டுமின்றி தில்லி, கேரளம் போன்ற வெளி மாநிலங்களிலும் மேட்டூர் மீன்களுக்கு கிராக்கி உண்டு. கட்லா, ரோகு, மிர்கால் போன்ற முதல் ரக மீன்கள் மீன் வளத் துறை மூலம் செயற்கை தூண்டுதல் முறையில் உற்பத்தி செய்யப்பட்டு, மேட்டூர் அணையில் விடப்படுகின்றன. மற்ற மீன் வகைகள் இயற்கையாகவே இனப் பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.
 4 ஆயிரம் பேர் பாதிப்பு: அணையில் வளரும் மீன்களைப் பிடிக்க இரண்டாயிரம் மீனவர்கள் மீன்வளத் துறையில் உரிமம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு உதவியாக மேலும் இரண்டாயிரம் பேர் பணி செய்கின்றனர்.
 அடிப்பாலாறு, ஏமனூர், செட்டிப்பட்டி, கோட்டையூர், ஒட்டனூர், பண்ணவாடி, நாகமரை, மாசிலாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரிக் கரையில் மீனவர்கள் முகாமிட்டு, மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
 தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 38 அடியாகச் சரிந்ததால், காவிரி ஆறு நீரோடை போலச் செல்கிறது. ஆழமும் குறைந்துவிட்டது. இதனால் மீன்கள் கிடைப்பதில்லை.
 பல மாதங்கள் மீன்கள் கிடைக்காத காரணத்தால் வறுமையில் வாடும் மீனவர்கள் தற்போது வேலை தேடி வெளியூர்களுக்கும், ஆந்திரம், கர்நாடகம் போன்ற வெளிமாநிலங்களில் கல் குவாரிகளுக்கும், திருப்பூர், கோவை போன்ற நகரங்களில் கட்டட வேலைகளுக்கும் சென்று விட்டனர்.
 மீனவர்கள் வெளியூர் செல்லும்போது குழந்தைகளையும் பள்ளிகளிலிருந்து அழைத்துச் சென்று விட்டனர். இதனால் மேட்டூர் பகுதியில் கணிசமாக மீனவர்கள் குறைந்து விட்டனர். இனி பருவமழை பொழிந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து காவிரி ஆறு பாய்ந்தால் மட்டுமே மீனவர்கள் மீண்டும் மீன்பிடி தொழிலுக்குத் திரும்ப வாய்ப்புண்டு.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com