சேலத்தில் புதுப்பொலிவு பெறும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா: கால் பதிக்கத் தயாராகும் ஐ.டி. நிறுவனங்கள்

சேலத்தில் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா புதுப்பொலிவு பெறத் தொடங்கியிருப்பது இளைஞர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Updated on
2 min read

சேலத்தில் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்கா புதுப்பொலிவு பெறத் தொடங்கியிருப்பது இளைஞர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 சேலத்தில் 32 பொறியியல் கல்லூரிகளும், 50 கலை அறிவியல் கல்லூரிகளும், 8 பாலிடெக்னிக்குகளும், 13 தொழில்பயிற்சி நிலையங்களும் (ஐ.டி.ஐ) இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து ஆண்டுதோறும் 62 ஆயிரம் இளைஞர்கள் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.டி வேலைக்காக வெளியூருக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே பணியாற்றிட வழிவகை செய்யும் வகையில், தமிழக அரசு 2007-ஆம் ஆண்டு சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அரபிக் கல்லூரி அருகே தகவல் தொழில் நுட்பப் பூங்காவைத் தொடங்கியது.
 தேசிய நெடுஞ்சாலையில் அரசு 164 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை எல்காட் நிறுவனத்துக்கு வழங்கியது. இதில் 53.33 ஏக்கர் பரப்பளவை மட்டும் எடுத்துக் கொண்டு மீதம் உள்ள நிலம் அரசிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்த இடத்தில் ஐடி நிறுவனம் கட்டும் இடம் தவிர்த்து சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு சார்பில் பல கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
 தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்கப்பட்டு 9 ஆண்டுகளைக் கடந்த நிலையில், தற்போது அங்கு நுழைவு வாயில் அருகே எல்காட் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டடம் 2.387 ஏக்கரில் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த சாலையைக் கடந்து செல்லும் இளைஞர்கள் தங்களின் கனவு பூர்த்தியாகும் நிலை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 இன்னும் ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தக் கட்டடத்தில் ஐ.டி.நிறுவனங்கள் தங்களுக்கான அலுவலகங்களை அமைத்துக் கொள்ளலாம் என எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுமட்டுமன்றி, 9.49 ஏக்கரில் சேலத்தைச் சேர்ந்த வீ டெக்னாலஜி நிறுவனம், தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் தங்களுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து கட்டடப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
 இதேபோல, மஹிமா டெக்னாலஜி, டி.பி புரபஷனல் நிறுவனங்கள் தலா 3 ஏக்கரிலும், ஜி.டி.பி இன்போ டெக் நிறுவனம் 2.5 ஏக்கரிலும் தங்களது அலுவலகங்களை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
 அரசின் ஒத்துழைப்புடன் சேலம் தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் செயல்பாடுகளை மேம்படுத்த இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய தொழிற்கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தலைவர் விமலன் தெரிவித்தார்.
 இதுகுறித்து மேலும் அவர் கூறியது:
 சேலம் ஐ.டி பார்க்கில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 11 ஆயிரம் சதுர அடியில் ஒரு நிறுவனம் தங்களது கிளையைத் தொடங்க உள்ளது. குறைந்தபட்சம் 2 ஆயிரம் சதுர அடியில் இருந்து கட்டடத்தில் இடம் ஒதுக்கப்பட உள்ளது. இதுமட்டுமன்றி தேவைப்படுவோருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது நான்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிலத்தைப் பெற்று, அங்கு கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளன.
 சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து பெற்றுள்ள சேலம் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, சென்னை மற்றும் பெங்களூருக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரக்கூடிய இடத்தில் அமைந்துள்ளது.
 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு மேற்கொண்ட முயற்சியால், அங்கு தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள் தீவிரமடைந்து, தற்போது 2-ஆவது தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. சேலத்திலும் அதைப் போன்றதொரு நிலையை உருவாக்குவோம். தடைபட்டுள்ள விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது மற்றும் வரிச் சலுகைகளை அறிவிப்பதற்கு அரசு முன்வருவதன் மூலம், சேலம் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளர்ச்சியடையும். உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
 சேலம் வாழ் இளைஞர்களின் நீண்ட நாள் கனவான ஐ.டி. பார்க் நனவாகும் சூழ்நிலை உருவாகியிருப்பது அவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com