19,148 விவசாயிகளுக்கு ரூ.112 கோடி பயிர்க்கடன் அளிப்பு: அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் 19,148 விவசாயிகளுக்கு ரூ.112 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது என
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் 19,148 விவசாயிகளுக்கு ரூ.112 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது என பொதுப் பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
 சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்களை வழங்கி அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
 தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் விவசாயிகள் கூட்டுறவு வங்கியின் மூலம் பெற்ற பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து, முதல் கையெழுத்திட்டார்.
 இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 81,224 விவசாயிகள் பெற்ற ரூ.399.27 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
 2016 -17 ஆம் ஆண்டுக்கு சேலம் மாவட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் பயிர்க் கடன் வழங்குவதற்கு ரூ.383 கோடி நிர்ணயம் செய்துள்ளது.
 இதில் தற்போது வரை 19,148 விவசாயிகளுக்கு ரூ.112 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகள் தள்ளுபடித் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற 7,849 விவசாயிகளுக்கு ரூ.47.38 கோடி அளவுக்கு மீண்டும் புதிய பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
 இந்த நிலையில் மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததன் பேரில் கூட்டுறவு சங்கங்களின் பயிர்க்கடன், நகை அடமானத்தின் பேரில் பயிர்க்கடன், கூட்டுறவு பொறுப்புக் குழுக் கடன் ஆகிய கடன்களை விவசாயிகளுக்கு வழங்க முடியாமலும், கடந்த ஆண்டு விவசாயிகள் பெற்ற கடன் தவணை தேதி வந்தும், கட்ட கூடிய கடன்களைச் செலுத்த முடியாமலும், உரம் உள்ளிட்ட இடுப்பொருள்கள் பெறமுடியாமலும் விவசாயிகள் தவித்து வந்தனர்.
 இதைக் கருத்தில் கொண்டு மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையின் மூலம் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளின் துயரை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இதனடிப்படையில் 41 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 331 விவசாயிகளுக்கு ரூ.1.54 கோடி பயிர்க் கடனாக மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை மூலம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
 விழாவில் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத், மக்களவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ராஜா, பி.மனோன்மணி, வெற்றிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் அ.க.சிவமலர், முதன்மை வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமதுரை முருகன், பொன்னி கூட்டுறவு சங்கத் தலைவர் நேதாஜி, வருவாய் கோட்டாட்சியர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி கூட்டுறவு ஒன்றியத் தலைவர் வெங்கடாசலம், துணைப் பதிவாளர்கள் தனலட்சுமி, ரத்தினவேல், கர்ணன், அறிவழகன், வட்டாட்சியர் சண்முகப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com