மனைப் பிரிவுகளை 6 மாதத்துக்குள் வரன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அங்கீகாரமற்ற மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் குறித்து தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் பேசியது:
சேலம் மாவட்டத்தில் உள்ள அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் குறித்து அரசு முதன்மைச் செயலர் அறிவுரைக்கு இணங்க தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த 2016 அக்டோபர் 20 ஆம் தேதிக்கு முன்னர் உருவாக்கப்பட்ட குறைந்தபட்சம் ஒரு மனையாவது பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள மனைகளுக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குறைந்தபட்ச அணுகு சாலை 4.8 மீட்டரும், பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிப் பகுதிகளில் குறைந்தபட்சம் 3.6 மீட்டரும், அகலம் கொண்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மனைப்பிரிவுகள் 6 மாதத்துக்குள் வரன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கவில்லை எனினும் நகர் ஊரமைப்புத் துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி மற்றும் தனியார் பொறியாளர்களின் பங்களிப்புடன் இடத்தினை ஆய்வு செய்து வரன்முறைப்படுத்தலாம்.
பரிசீலனைக் கட்டணமாக மனை ஒன்றுக்கு ரூ.500, முறைப்படுத்துதல் கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணமாக 1 சதுர மீட்டருக்கு மாநகராட்சிப் பகுதிக்கு ரூ.100 மற்றும் ரூ.600, நகராட்சிப் பகுதிகளில் தேர்வு நிலை நகராட்சிக்கு பகுதிக்கு ரூ.60 மற்றும் ரூ.350 இதர நகராட்சி பகுதிக்கு ரூ.60 மற்றும் ரூ.250 பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.30 மற்றும் ரூ.150, கிராம ஊராட்சிகளில் ரூ.30 மற்றும் ரூ.100 மனை ஒன்றுக்கு செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு மனை உரிமையாளர்களும் தனிக் கவனம் செலுத்தி மனை வரன்முறைப்படுத்தப்பட வேண்டும். வரன்முறைப்படுத்த கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் நகர் ஊரமைப்புத் துறை, ஆணையர், சென்னை மற்றும் அரசு செயலரிடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கா.இரா.செல்வராஜ், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் ஆர்.லட்சுமி, மாவட்ட ஆட்சியரின், நேர்முக உதவியாளர் (பொது) சி.விஜய்பாபு, உதவி இயக்குநர் ஊராட்சிகள் தெய்வசிகாமணி, நகராட்சி ஆணையர்கள், செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.