வாழப்பாடி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படுமா?

வாழப்பாடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்களையும்,  கூடுதலாக மருத்துவர்களை
Updated on
1 min read

வாழப்பாடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்களையும்,  கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறுவை சிகிச்சை அரங்கம், உடற்கூறு பரிசோதனைக் கூடம் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்றும் அந்தப் பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி,  அதன் சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் இயங்கி வந்த அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமானது 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டு இரு ஆண்டுகள் கடந்தும்,  மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. 
நிரப்பப்படாத பணியிடங்கள்: குறிப்பாக, அரசு மருத்துவமனையில் பணியில் இருக்க வேண்டிய, இளநிலை உதவியாளர், மகப்பேறு உதவியாளர், ரத்தப் பரிசோதகர், சுகாதாரப் பணியாளர், உதவி செவிலியர், ஆய்வக உதவியாளர்,  பல்நோக்கு பணியாளர்கள், சமையலர் உள்ளிட்ட 10 பணியிடங்கள் நிரப்பப்படாமல்  உள்ளன. 
இதனால், சிகிச்சை பெறவரும் நோயாளிகளுக்கு, புற நோயாளிகள் பிரிவில் பதிவு செய்து சீட்டு வழங்குதல்,  ஊசி போடுதல், கட்டுக் கட்டுதல், சுத்தம் செய்தல் போன்ற பணிகளை குறித்த நேரத்துக்குள் செய்ய ஆளில்லாத நிலை நீடித்து வருகிறது.
உடற்கூறு பரிசோதனைக் கூடம் அமைக்கப்படுமா?
வருவாய் வட்ட தலைமையிடமான வாழப்பாடியில் அரசு மருத்துவமனை இருந்தும் உடற்கூறு பரிசோதனைக் கூடம் அமைக்கப்படாததால்,  விபத்தில் இறப்பவர்கள் மற்றும் காவல் துறை வழக்குப் பதிவுக்குள்ளாகும் சடலங்களை உடற்கூறாய்வு செய்வதற்கு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, உறவினர்கள் நாள் முழுக்க காத்திருக்க வேண்டிய அவலமும் தொடர்ந்து வருகிறது.  
எனவே, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த பணியிடங்களை நிரப்பிடவும், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும், அறுவை சிகிச்சை அரங்கம், உடற்கூறு பரிசோதனைக் கூடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி மேம்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.


மருத்துவர்கள் பற்றாக்குறை
ஒரேயொரு அறுவை சிகிச்சை அரங்கம் மட்டுமே இருப்பதால்,  கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு, குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், எலும்பு முறிவு போன்ற அத்தியாவசிய அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கும், கூடுதலாக மயக்க மருந்து மருத்துவர், மகப்பேறு,  அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நியமிக்கப்படாததால், இரவு நேரத்தில் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக அறுவை சிகிச்சை பெற சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ள சேலம் அல்லது ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.


தமிழக அரசுக்கு அறிக்கை 
இதுகுறித்து சேலம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சத்யாவிடம் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு,  "வாழப்பாடி மட்டுமின்றி, மற்ற அரசு மருத்துவமனைகளிலும் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.   இவற்றை நிரப்ப தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com