ஆறகளூரில் கல்வெட்டு, நவகண்ட சிற்பம் கண்டெடுப்பு

ஆறகளூர் வெளிப்பாளையம் அருகேயுள்ள ஆறகளூரில் உள்ள விளைநிலத்தில் 17-ஆம் நூற்றாண்டின்

ஆறகளூர் வெளிப்பாளையம் அருகேயுள்ள ஆறகளூரில் உள்ள விளைநிலத்தில் 17-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டையும், நவகண்ட சிற்பத்தையும்  சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர்  வியாழக்கிழமை கண்டெடுத்தனர்.
இதுதொடர்பாக சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் வீரராகவன்,   பொன்.வெங்கடேசன்,  மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன்,கவிஞர் மன்னன், புலவர் வீராசாமி உள்ளிட்டோர் கூறியது:-
கல்வெட்டானது  96 செ.மீ. நீளமும், 37 செ.மீ. அகலமும்,  20 செ.மீ. தடிமனும் உள்ள ஒரு பலகைக் கல்லில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 வரிகளிலும்,  பின்பக்கம் 23 வரிகளிலும்,  பக்கவாட்டில் 9வரிகளிலும் மூன்று பக்கங்களில் எழுத்துகள் உள்ளது.
ஆறகளூரில் இதுவரை தொல்லியல் துறையால் 48 கல்வெட்டுகளும், சேலம் வரலாற்று ஆய்வுமையத்தால் 5கல்வெட்டுகளும் படிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.  புதிய கல்வெட்டில் பல தகவல்கள் தெரிகின்றன.
மலாடாகிய ஜனநாத வளநாட்டு மகதை மண்டலத்து நரையூர் கூற்றத்து தென்கரை சீர்மையான ஆறகழூர் என குறிப்பிடுகிறது. சோழர்கள் வாணகோவரையர்கள்,பாண்டியர்கள்,விஜயநகரபேரரசு,நாயக்கர்கள் கல்வெட்டுகள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. வாண்டையார்களின் கல்வெட்டு இப்போதுதான் முதன்முறையாக கிடைத்துள்ளது. இந்த வாண்டையார்கள்  நாயக்க மன்னர்கன்ன் கீழ் அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர்.
குமாரமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார் ஆறகழூர் திருகாமீசுரமுடைய தம்பினார் கோயிலுக்கு குமாரபாளையம் என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார். அப்போது ஆறகழூரில் வசித்து வந்த நல்ல குடியைச் சேர்ந்த நாற்பத்தெண்ணாயிரம் என்பவர்களை குமாரபாளையத்தில் புதிய குடிகளாக குடியேற அனுமதி அளித்துள்ளனர். 
இந்த நாற்பத்தெண்ணாயிரவர் என்பவர்கள் வேளாண்மை, வணிகம் செய்த குடிகளாக இருக்கலாம்.
குற்றச்செயல்களை செய்பவர்களை ஒரு போதும் குமாரபாளையத்தில் குடியேற்றக்கூடாது என ஆணையிட்டு உள்ளனர். அங்கு குடியேறும் நற்குடியினர் எல்லா உரிமைகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள். இந்தத் தானத்தையும் கட்டளையையும் மீறுபவர்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள்.இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டுக்கு அருகிலேயே உள்ள நவகண்ட சிற்பத்தில்,  தன் நாடு வெற்றி பெறகொற்றவைக்கு தன் உடலின் 9 பாகங்களை அறிந்து படையல் இட்டு தன்னைத்தானே பலி கொடுத்துக் கொண்ட வீரனுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த வயல்வெளியில் கறுப்பு சிகப்பு பானைஓடுகள் காணப்படுகின்றன. இந்த இடம் முன்பு மக்களின் வாழ்விடப்பகுதியாக இருந்தது உறுதியாகிறது  என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com