சேலம் டவுன் ரயில் நிலையம் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்தார்.
சேலம் ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில், உலக மகளிர் தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
சேலம் தெற்கு ரயில்வே மகளிர் அமைப்பின் தலைவி அனிதா வர்மா, விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில், கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா பேசியது:
சேலம் கோட்ட நிர்வாகம் பெண் ஊழியர்களுக்காக பல்வேறு வசதிகளையும், மேம்பாடுகளையும் செய்து வருகிறது. எந்தவொரு பெண் ஊழியர் விடுமுறை கோரி விண்ணப்பித்தாலும் எந்த ஒரு தடையும் மறுப்பும் இன்றி அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது.
சேலம் டவுன் ரயில்நிலையம் சேலம் கோட்டத்தின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையமாக மாற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்வே பள்ளிகளில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் இதர ஊழியர்கள் உள்பட அனைத்து உறுப்பினர்களும், பெண்களாகக் கொண்ட அனைத்து மகளிர் கல்விக் கூடமாக மாற்றப்பட உள்ளது என்றார்.
விழாவில் சேலம் கோட்ட முதுநிலை நிதி மேலாளர் உமாமகேஸ்வரி, சேலம் கோட்ட பணியாளர் நல அலுவலர் எஸ். திருமுருகன், சேலம் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கோட்ட செயலாளர் எம்.கோவிந்தன், சேலம் கோட்டத்தின் இதர அதிகாரிகளும், பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.