ஏற்காட்டில் வாகன நிறுத்துமிடம்: நெரிசலைக் குறைக்க ஒருவழி சாலையாக மாற்ற வேண்டும்

வளைந்து நெளிந்துச் செல்லும் சாலைகள், புதிதாய் பூத்து நறுமணம் வீசும் காஃபி தோட்ட மலர்கள்,
Updated on
2 min read

வளைந்து நெளிந்துச் செல்லும் சாலைகள், புதிதாய் பூத்து நறுமணம் வீசும் காஃபி தோட்ட மலர்கள், கண்களுக்கு விருந்தளிக்கும் பசுமை என ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மலை வாசஸ்தலத்தை சேலம் நகரிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் அடைந்து விடலாம்.
கோடை விடுமுறையையொட்டி, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்குக் குவிந்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் காரணமாக கோடை விழா, மலர்க் காட்சி நடத்துவது நிகழாண்டில் காலதாமதமாகி உள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதாவது மே 23-ஆம் தேதிக்குப் பிறகு கோடை விழா நடத்தப்படும் எனத் தெரிகிறது.  கோடை விழாவையொட்டி ஏற்காடு மலைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
ஆனால்,  மலைப் பகுதி என்பதாலும்,  சாலைகள் முறையாக சீரமைக்கப்படாத காரணத்தாலும்,  கோடை விழா காலங்களில் நகரில் வாகன நெரிசலால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதை ஒவ்வோர் ஆண்டும் கண்கூடாகக் காண முடிகிறது.
படகு இல்லத்திலிருந்து ஜெரினா சாலை வழியாக ரோஜா தோட்டத்துக்கு அதாவது லேடீஸ் சீட்,  ஜென்ஸ் சீட் பகுதிக்குச் செல்லும் சாலை மிக மோசமாக உள்ளது.  பல ஆண்டு காலமாகக் குண்டும், குழியுமாக இருப்பதால்,  அவ் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.  ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் செல்ல ஒரே நேரத்தில் நுற்றுக்கணக்கான வாகனங்கள் அவ் வழியே செல்வதால்,  வாகன நெரிசலும் ஏற்படுகிறது. 
எனவே,  நிகழாண்டில் படகு இல்லத்தில் இருந்து ஜெரினா சாலை வழியாக லேடீஸ் சீட்  செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மேலும்,  படகு இல்லத்திலிருந்து ஜெரினா சாலை வழியாக லேடீஸ் சீட் செல்லும் வழியை ஒரு வழிச் சாலையாக அறிவிக்க வேண்டும்.  அதேபோல, படகு இல்லத்திலிருந்து ஜெரினா சாலை,  லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட்,  முருகன் நகர் வழியாக படகு இல்லத்துக்கு வர வழி ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் தேவதாஸ் தெரிவித்தார்.
அதுபோல நீலமலை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் வி.கே. நல்லமுத்து கூறியது:
ஏற்காட்டில் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும். சாலையோரங்களில் வாகனங்கள்  நிறுத்துவதை போலீஸார் அனுமதிக்கக் கூடாது.  இதனால், வாகன நெரிசல் ஏற்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகும் அதேவேளையில்,  உள்ளூர்வாசிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
குடிநீர் வசதியும், கழிப்பறை வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும்.  மழை வந்தால் ஒதுங்கி நிற்க ஓரிடம் கூட இல்லை.
எனவே,  நிழற்குடையும்,  நிழற்குடையுடன் கூடிய இருக்கைகளும் போதிய அளவில் அமைக்க வேண்டும். அதுபோல,  இருசக்கர வாகனத்தில் வரும் அனைவரையும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்டோர் அதாவது 3 பேர்,  4 பேர் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் கார்,  இரு சக்கர வாகனங்களை மித வேகத்தில் 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதிய சுற்றுலாப் பேருந்துகளை இயக்க வேண்டும்.  தேவையான இடங்களில் நெரிசல் ஏற்படும் சாலைகளை அடையாளம் கண்டு ஒருவழி பாதையாக்க வேண்டும் என்றார்.
தகவல் மையம் தேவை
இதுதொடர்பாக காஃபி தோட்ட ஆலோசகர் சஞ்சய்தாஸ் கூறியதாவது:
ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு தகவல் அளிக்கும் வகையில் படகு இல்லம்,  ரவுண்டானா, பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் தகவல் மையம் அமைத்திட வேண்டும்.
ரவுண்டானா பகுதியில் புறக் காவல் நிலையத்தில் போதிய போலீஸாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.  சேலத்திலிருந்து ஏற்காடு வரும் வாகனங்கள் ரவுண்டானாவைச் சுற்றிச் செல்லும்படி அறிவுறுத்த வேண்டும்.
சில வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறி ரவுண்டானா பகுதியில் சுற்றி வராமல் வலது புறமாகத் திரும்புவதால், அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இதை போலீஸார் கண்காணித்து வழிகாட்டிப் பலகைகளை வைத்து அறிவுறுத்த வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com