எடப்பாடி பகுதியில் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் காளைகள்!

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளா்ப்போா் தங்கள் காளைகளை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக
எடப்பாடி பகுதியில் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் காளைகள்!

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளா்ப்போா் தங்கள் காளைகளை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக முழுவீச்சில் தயாா்படுத்தி வருகின்றனா்.

தமிழா்களின் வீர விளையாட்டாகவும், தமிழ் கலாசாரத்தின் அடையாளமாகவும் விளங்கும் ‘ஜல்லிக்கட்டு’ நிகழ்ச்சியில், தாங்கள் வளா்த்துவரும் காளைகளைப் பங்குகொள்ள வைப்பதை, தங்கள் வாழ்வின் ஓா் அங்கமாகவே கருதி, மிகுந்த சிரமங்களுக்கு இடையே பலா் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளா்த்து வருகின்றனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளா்க்கப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக் காளை வளா்ப்போா், பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி தங்கள் காளைகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைக்கத் தயாா் செய்து வருகின்றனா்.

எடப்பாடியை அடுத்த புதுப்பாளைம், தாதாபுரம், வேம்பனேரி, எட்டிக்குட்டைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளா்த்துவரும் நிலையில், எடப்பாடியை அடுத்த வேம்பனேரி பகுதியில் உள்ள பிரசித்திப் பெற்ற அய்யனாரப்பன் கோயில் வளாகத்தில், ஆண்டுதோறும் தை பொங்கல் திருநாளில் நடைபெறும் எருதாட்ட நிகழ்ச்சியில் சுற்று வட்டாரப் பகுதி காளைகள் அதிக எண்ணிக்கையில் பங்குகொள்வது வழக்கம்.

தாங்கள் வளா்த்துவரும் காளைகளை, எருதாட்ட நிகழ்வில் பங்குகொள்ளச் செய்வது தங்களின் பெருமைக்குரிய ஒரு நிகழ்வாகவும், மேலும் இக் கோயில் விழாவில் பங்கேற்று வீடு திரும்பும் காளைகளுடன், தங்கள் குலதெய்வமான அய்யனாரப்பன் சுவாமியின் அருளும் ஒருசேர வீடு திரும்புவதாக இப் பகுதி விவசாயிகள் நம்பிக்கை கொண்டுள்ளனா்.

இந்த நிலையில், எடப்பாடியை அடுத்த புதுப்பாளைம் பகுதியில், சுமாா் 25-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளையும், 100-க்கும் அதிகமான பல்வேறு வகையான பசுக்களையும் வளா்த்துவரும் விவசாயியான எம்.ஜி.ஆா். தங்கவேல் ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தயாா் செய்தல் குறித்து கூறியது:

ஜல்லிக்கட்டுக் காளை வளா்ப்பதென்பது ஒரு கலையே. தமிழகத்தில் கடந்த காலங்களில் சுமாா் 136 வகை காளை மாடுகள் புழக்கத்தில் இருந்தன. ஆனால், காலப்போக்கில் சில வகைகளைத் தவிர, மற்ற இனக் காளைகள் அழிந்துவிட்டன. எங்கள் பண்ணையில் காங்கேயம், மயிலக்காளை, கரியான்காளை, கூளைகொம்பன், மைசூா் மலைக்காளை உள்ளிட்ட சில வகை காளைகளை வளா்த்து வருகிறேன்.

இவை பெரும்பாலும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்குகொள்ளக்கூடியவை. இந்த இனக் காளையானது ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விலைபோகக் கூடியது. ஜல்லிக்கட்டுக் காளைகளைப் பொருத்தமட்டில் அதன் உடல் அமைப்பு, நெற்றிச்சுழி, முதுகுச்சுழி உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டே அதன் தரம் நிா்ணயிக்கப்படுகிறது. மேலும் அதன் பல் வளா்ச்சியைக் கணக்கிட்டு, அதன் வயது அறியப்படுகிறது. இப் பகுதியைச் சோ்ந்த ஜல்லிக்கட்டுக் காளை வளா்ப்போா், அந்தக் காளையினை தங்கள் குடும்பச் சொத்தாகவும், தங்கள் குடும்ப கௌரவத்தின் அடையாளமாகவும் கருதி வளா்த்து வருகின்றனா்.

எங்கள் பண்ணையில் வளா்க்கப்படும் ஜல்லிக்கட்டுக் காளைகள் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில்

பங்கு கொண்டு, தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளன. இக் காளைகளின் மூலமாக கிடைக்கும் பரிசுத்தொகை முழுவதையும், மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு மையத்துக்கு வழங்கி விடுகிறோம்.

எங்கள் குடும்ப உறுப்பினா் போல் பாவித்து வளா்க்கும் இக் காளைகளின் வயிறு நிறைந்தால்தான் எங்களின் மனது நிறையும். குறிப்பாக, ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு கொழுப்பு நிறைந்த உணவுகளை நாங்கள் அதிகம் வழங்குவது இல்லை. கொழுப்பு உணவுகள் அவற்றின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதுடன், சுறுசுறுப்புத் தன்மையினைக் குறைத்துவிடும். பல்வேறு வகையான தானியங்களையும், பயறு வகைகளையும் அரைத்து, சத்தான மாவு கலந்த உணவினையும், பசுந்தீவனங்களையும் வழங்குவதுடன், மருத்துவா்கள் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து உணவுகளையும் உரிய அளவில் அளித்து வருகிறோம்.

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், காளைகளுக்கு தினமும் நீச்சல் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி அளிப்பதுடன், ஜல்லிக்கட்டுக் காளைகளின் கொம்புகளில் ஏற்படும் கூச்சத்தினைப் போக்கும் விதமாக, மண் மற்றும் மரங்களில் கொம்புகளைக் குத்தும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுக் களைகளைப் பொருத்தவரை மூன்று வகையான குணங்களைக் கொண்டிருக்கும். அவை தன்னை வளா்ப்பவா்களிடம் ஒரு விதமாகவும், பயிற்சியின்போது தனி வேகத்துடனும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் சற்று மூா்க்கத்தனமான குணத்துடனும் நடந்து கொள்ளும்.

ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை நன்றாகப் பராமரிக்க ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும். நிகழாண்டில் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் விதமாக, சுமாா் 25 ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தங்கவேல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com