வாழப்பாடி அருகே புதுமனை புகுவிழாவுக்கு வழக்கமான சடங்கு சம்பிரதாயங்கள், மந்திரங்கள் ஓதுவதை தவிர்த்து, தனது மகளை 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்ய வைத்து மந்திரமாக ஓதி, பேளூரில் ஒரு தம்பதியர் புதிய வீட்டில் குடியேறினர். இத்தம்பதியரின் புதுமையான விழிப்புணர்வுக்கு இலக்கிய ஆர்வலர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூரைச் சேர்ந்தவர் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் வாகன முகவர் ராஜேந்திரன். இவரது மனைவி தீபா. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழ் இலக்கியங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட இத்தம்பதியர், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவர்களது மகள் சுபாவை, 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வைத்தனர். இச்சிறுமி, அண்மையில் வாழப்பாடி இலக்கியப் பேரவை நடத்திய திருவள்ளுவர் தின விழாவில் 1330 திருக்குறளையும் ஒப்பித்துப் பாராட்டுப் பெற்றார்.
இந்நிலையில் பேளூரில் புதிதாக வீடு கட்டியுள்ள ராஜேந்திரன்-தீபா தம்பதியர், இந்த வீட்டுக்கு குறளகம் என பெயர் சூட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி, இந்த வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு வழக்கமான சடங்கு சம்பிரதாயங்கள், மந்திரங்கள் ஓதுவதைத் தவிர்த்தனர்.
1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்த தனது மகளைக் கொண்டு, புதுமையான முறையில் திருக்குறளையே மந்திரமாக ஓதி புதிய வீட்டில் குடியேறினர். அறநெறி கற்பிக்கும் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் மீது தற்கால சந்ததியினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தனது மகளையே திருக்குறளை மனப்பாடம் செய்ய வைத்து மந்திரமாக ஓதி, புதுமையான முறையில் புதிய வீட்டில் குடியேறியதாக ராஜேந்திரன்-தீபா தம்பதியர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.