வாழப்பாடி பகுதியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், தனியார் பள்ளிகளை போல விளம்பரம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கிராமப் புறங்களிலும் கூட அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதை தவிர்க்கும் பெற்றோர், தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. இதனால் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையும் பரவலாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில், சோதனை முயற்சியாக எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
வரும் கல்வியாண்டுக்கு எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கையை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கப்படுமென அரசு அறிவித்ததால், அங்கன்வாடி மையப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்க்கையில் முனைப்புகாட்டி வருகின்றனர்.
வாழப்பாடி வட்டாரத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதற்கான உத்தரவு இதுவரை வழங்கப்படவில்லை. இருப்பினும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், தனியார் பள்ளிகளை போல பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே விளம்பரம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் ஒருவர் கூறியது: பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதை தடுக்கும் நோக்கில், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் வாயிலாக எல்.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சேர்க்கையை தொடங்குவதால், 3 வயது நிறைந்த குழந்தைகள் உள்ள வீடுகளுக்கே சென்று, அரசுப் பள்ளியின் தரம் மற்றும் சலுகை திட்டங்கள் குறித்து பெற்றோருக்கு தெரிவித்து ஊக்கப்படுத்தி வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.