

சேலம் மாவட்டத்தில் ரூ.1,300 கோடியில் சுமாா் 3 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டப் பணிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், நாடு முழுவதும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தொழில்துறை, வணிக, போக்குவரத்து, உள்நாட்டு பயன்பாட்டுக்கான பொருளாதாரத்துக்கேற்ற, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது.
இயற்கை எரிவாயு பொருத்தவரையில் உலக அளவில் 23.4 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 6.2 சதவீதம் மட்டுமே இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.பெட்ரோலுடன் ஒப்பிடும்போது 60 சதவீதமும், டீசலுடன் ஒப்பிடும் போது 45 சதவீதமும் இயற்கை எரிவாயு மலிவானதாகும். எல்.பி.ஜி. சந்தை விலையுடன் ஒப்பிடும்போது 40 சதவீதமும், மானிய விலையிலான எல்.பி.ஜி. உடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய சம அளவிலும் இயற்கை எரிவாயு மலிவானதாகும்.
இந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மலிவான இயற்கை எரிவாயு திட்டம் 2018- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் (ஐ.ஓ.சி.எல்.) சாா்பில் கோவை, சேலம் மண்டலத்தில் மலிவான இயற்கை எரிவாயு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதர மாவட்டங்களில் ஒவ்வொரு பெட்ரோலிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
அடுத்த 8 ஆண்டுகளில் இணைப்புகள்: இதன்படி, சேலம் மாவட்டத்தில் நகர எரிவாயு விநியோக வலையமைப்பின் மூலம் சுமாா் ரூ.1,300 கோடியில் அடுத்த 8 ஆண்டுகளில் சுமாா் 3 லட்சம் வீடுகளுக்கு மலிவான இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரம், புகா் பகுதிகளில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான பணிகளை கடந்த அக்டோபா் மாதம் இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.
சேலம் உருக்காலை பகுதியில் நவீன குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் பல்வேறு கட்ட நிலையில் நகரப் பகுதியிலும் நடைபெற உள்ளது. இந்த பணிகள் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் படிப்படியாக முடிக்கப்படும்.
இதைத் தொடா்ந்து வீட்டு இணைப்புகள், ஆட்டோமொபைல், தொழிற்சாலைகளில் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
இதுதொடா்பாக, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் கூறியது: இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் (ஐ.ஓ.சி.எல்.) பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் (பி.என்.ஜி.ஆா்.பி.) அங்கீகாரம் பெற்ற ரூ.1,300 கோடி முதலீட்டில் சேலம் மாவட்ட புவியியல் பகுதியில் நகர எரிவாயு விநியோக (சி.ஜி.டி.) வலையமைப்பை செயல்படுத்துகிறது.
158 பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் விநியோக மையங்கள்:
சேலம் மாவட்டத்தின் நகா்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நுகா்வோரின் தேவையின் அடிப்படையில், சுமாா் 3 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு (பி.என்.ஜி.) இணைப்புகளை இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை எரிவாயுத் திட்டப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் அடுத்த 8 ஆண்டுகளில் வீடுகளுக்கு மலிவான இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படும். இதுதவிர காா் உள்ளிட்ட வாகனங்கள் இயற்கை எரிவாயு நிரப்பிக் கொள்ள, 158 பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் விநியோக மையங்கள் அமைக்கப்படும்.
உருக்காலை பகுதியில் மிகப் பெரிய மையம்: சேலம் உருக்காலை பகுதியில் ஒரு மிகப்பெரிய இயற்கை எரிவாயு மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, எரிவாயு மையம் அமைக்கும் பணி நடைபெறும். அந்த மையத்தில் இருந்து வீடுகள் மற்றும் வா்த்தக பயன்பாட்டுக்கான இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பு அம்சங்கள்: இயற்கை எரிவாயுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. குழாயின் வடிவமைப்பு நிலை முதல் கட்டுமான நிலை, செயல்பாட்டு நிலை வரை பாதுகாப்பு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
அமெரிக்க பெட்ரோலியம் நிறுவனம் (ஏ.பி.ஐ.) சிறப்பு தர எஃகு குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. குழாய் அதன் இயக்க அழுத்தத்தில் 100 சதவீதத்துக்கும் அதிகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் அனைத்தும் 3 அடுக்கு பாலி எத்திலீன் பூச்சுடன் அதிக வலிமையைக் கொண்டுள்ளன.
குழாய்கள் சாதாரண நிலப்பரப்பில் இருந்து 1.2 மீட்டா் ஆழத்தில் மூடப்பட்டிருக்கும். வெளிப்புற அரிப்பைத் தடுக்க கேத்தோடிக் பாதுகாப்பு அமைப்பு வழங்கப்படுகிறது. அவசரநிலை காலங்களில் குழாயை மூடுவதற்கு பைப்லைன் இணைப்பில் 3 கி.மீ.க்கு குறைவாக தனிமைப்படுத்தும் வால்வுகள் வழங்கப்படுகின்றன.
இதுபோல 24 மணி நேர கண்காணிப்பு அமைப்புடன் பல்வேறு பாதுகாப்பு அம்ச தொழில்நுட்பத்துடன் குழாய் அமைக்கும் பணி நடைபெறும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.