"நம்பிக்கையும், தைரியமும் இல்லாதவர்களே கூட்டணி வைக்கிறார்கள்'
By DIN | Published On : 01st April 2019 10:16 AM | Last Updated : 01st April 2019 10:16 AM | அ+அ அ- |

நம்பிக்கையும், தைரியமும் இல்லாதவர்களே கூட்டணி வைக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
நாம் தமிழர் கட்சியின் சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அ. ராசாவை ஆதரித்து, சேலம் தாதகாப்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது:
தமிழகத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறார்கள். சேலம்-சென்னை 8 வழி சாலை என்பது மக்களின் நலனுக்கானது அல்ல; பெரு முதலாளிகளுக்கானது.
8 வழி சாலை திட்டம் தேவையற்ற திட்டமாகும். ஏற்கெனவே உள்ள சாலைகளை அகலப்படுத்தி அதனை 8 வழி சாலை ஆக மாற்றலாம். பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை அழித்து மலைகளைக் குடைந்து எதற்கு இந்த எட்டு வழி சாலை? மக்கள் நலனுக்காக இந்த சாலை போடப்படவில்லை.
இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் விரைவில் இந்தியா நீரற்ற நாடாக மாறும் என்பது குறித்து எந்தத் தலைவரும் கவலைப்படுவதில்லை. சொந்த நாட்டு மக்களிடம் நிலத்தை எடுக்க எதற்காக அவசரச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. 100 கோடி பேருக்கு செல்லிடப்பேசி கொடுக்கும் அரசு, 130 கோடி பேருக்கு தண்ணீர் கொடுக்க என்னத் திட்டம் வைத்திருக்கிறது.
வாழ்க்கை நெறியைப் போதிக்காத கல்வி இருப்பதால்தான் கூட்டு வன்புணர்ச்சி போன்ற கொடுமைகள் நடக்கின்றன. மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்கள் மனதில் புரட்சி வர வேண்டும். நம்பிக்கையும், தைரியமும் இல்லாதவர்களே கூட்டணி வைக்கிறார்கள் என்றார்.