குடிநீர் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 11th April 2019 09:29 AM | Last Updated : 11th April 2019 09:29 AM | அ+அ அ- |

குடிநீர் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை முற்றுகையிட்டனர் .
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி பகுதிக்குள்பட்ட லட்சுமி நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக சரியான முறையில் குடிநீர் வரவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குடிநீர் இணைப்புக் கட்டணமாக வைப்புத் தொகை ரூ.1,360, குடிநீர் கட்டணம் ரூ.600 செலுத்தியும் தண்ணீர் சரியான முறையில் வருவதில்லை என்றும், இப்பகுதியில் சிலர் மின் மோட்டார் வைத்து தண்ணி உறிஞ்சுவதால் எங்களுக்கு தண்ணீர் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுவதில்லை எனவும் கூறினர்.
இதையடுத்து, தகவலறிந்து வந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார், வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடித் தீர்வு காணப்படும் என கூறிய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதேபோல், இளம்பிள்ளை அருகே உள்ள ஏகாபுரம் கிராமம், ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் கேட்டு இளம்பிள்ளை-எடப்பாடி சாலை ரெட்டியூர் பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சசிகுமார் மற்றும் ஊராட்சி செயலர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ரெட்டியூரில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியில் நீண்ட காலமாக தண்ணீர் வருவதில்லை. இந்த தொட்டியை சுத்தம் செய்து விரைவில் தண்ணீர் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறிய பின்னர் கலைந்து சென்றனர்.