1,100 ஆண்டுகளுக்கு முந்தைய மலையமான் கால கொற்றவைச் சிலை கண்டெடுப்பு

சேலம் வரலாற்று மைய ஆய்வாளர்கள் குழு அண்மையில் கடலூர் மாவட்டத்தில் நடத்திய ஆய்வில்

சேலம் வரலாற்று மைய ஆய்வாளர்கள் குழு அண்மையில் கடலூர் மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய கொற்றவை சிலை மற்றும் கல்வெட்டைக் கண்டெடுத்தனர்.
சேலம் வரலாற்று மைய ஆய்வாளர்கள் விழுப்புரம் வீர ராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பெரியநெசலூர் என்ற கிராமத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய மலையமான் கால கொற்றவை சிலையையும், சில கல்வெட்டுகளையும் கண்டெடுத்தனர்.
சங்க காலத்தில் இருந்தே கொற்றவை வழிபாடு இருந்து வந்தது. கொற்றவை பாலை நிலக் கடவுளாக அறியப்படுகிறார்.  காடுகளில் வசித்த வேட்டுவர்கள் தங்களது வேட்டையில் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்டனர்.
சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் கோயில் ஐயை கோட்டம் என அழைக்கப்பட்டது.  பல்லவர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடு மிகச் சிறப்பாக இருந்துள்ளது.
பல்லவர்களின் கீழ் ஆட்சி செய்த வாணர்கள்,  மலையமான்கள் போன்றோர் பல்லவர்களின் கலை நடையை பின்பற்றி கொற்றவையின் தோற்றத்தை வடிவமைத்துள்ளனர்.
பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மங்கமுத்தாயி அம்மன் கோயிலில் மேற்குப் புறத்தில் இந்த கொற்றவைச் சிலை தனி மேடையில் உள்ளது. 
ஆரம்ப காலத்தில் இது கருவறைக்குள் இருந்திருக்க கூடும்.  இக் கொற்றவை கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். 
மலையமான்களால் செய்யப்பட்டுள்ளது.  பல்லவர்கள்  வலு இழந்த 9-ஆம்  நூற்றாண்டில் மலையமான்கள் இப் பகுதியை ஆட்சி செய்தனர் என்பதை  இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 
இக் கொற்றவையின் உயரம் 102 செ.மீ,  அகலம் 12 செ. மீ. ஆகும். ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. எருமைத் தலையின் மீது சமபங்க நிலையில் நின்றபடி உள்ளார்.  மார்பில் சன்னவீரம் உள்ளது.  இந்த சன்னவீரம் என்பது போர் கடவுள்கள்.  போர் வீரர்கள் மட்டும் அணியும் வீரச் சங்கிலியாகும்.  கையில் பாம்புடன் ஒரு கொற்றவை கண்டறியப்படுவது தமிழகத்தில் இதுவே முதன் முறையாகும்.  தேவியின் கால் அருகே நவகண்டம் கொடுத்துக் கொள்ளும் வீரன் உள்ளான்.  நவகண்டம் என்பது தன் நாடு போரில் வெற்றி பெற வீரன் ஒருவன் தனது உடலில் உள்ள ஒன்பது பாகங்களின் சதையை அரிந்து கொற்றவைக்கு படையல் இட்டு பலி கொடுத்துக் கொள்வதாகும்.  இடப்புறம் கொற்றவையை வணங்கிய நிலையில் ஓர் அடியவர் உள்ளார்.
கல்வெட்டு: எருமைத்தலையின் வலது புறம் 6 வரிகளில் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது.  முக்குல மலையமான் சாதன் என கல்வெட்டு வாசகம் உள்ளது.  முக்குல மலையமான் வம்சத்தைச் சேர்ந்த சாதன் என்பவன் இந்த கொற்றவையைச் செய்திருப்பதை இந்தக்  கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.  மலையமான்கள் சங்க காலத்தில் இருந்தே திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளனர்.
சில காலம் சுதந்திரமாகவும் சில காலம் பல்லவர், சோழர், பாண்டியர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர்.  பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தபோது அவர்கள் பாணியில் அமைந்த கொற்றவை இதுவாகும்.
மேலும், இந்த ஊர் சோழர் கால, பாண்டியர் கால ஆட்சிக்குள்பட்டு இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com