அமமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை
By DIN | Published On : 17th April 2019 02:42 AM | Last Updated : 17th April 2019 02:42 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் வீடுகளில் வரிமான வரித்துறையினர் அடுத்தடுத்து நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சோதனையில் பணம், பொருள், ஆவணங்கள் ஏதும் சிக்காததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (50). கட்டட ஒப்பந்ததாரரான இவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வாழப்பாடி ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உள்ளார்.
இவரது வீட்டில் பணத்தைப் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்குக் கொடுப்பதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை வீரமுத்து வீட்டுக்கு அடுத்தடுத்து சென்ற பறக்கும்படை மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையில் பணம், பொருள் மற்றும் ஆவணங்கள் ஏதும் சிக்காததால் திரும்பிச் சென்றனர்.
அதுபோல இதே கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்.
இவரும் அமமுக எம்.ஜி.ஆர். மன்ற சேலம் மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார்.
இவரது வீட்டில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை விஜயன் வீட்டுக்குச் சென்ற தேர்தல் பணிக்கான சிறப்பு வருமான வரி அலுவலர்கள், வீடு, மாட்டுக் கொட்டகை, டிராக்டர் செட், வைக்கோல் குவியல் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அவரது வீட்டிலும் பணம், பொருள், ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
ஒரே கிராமத்திலுள்ள அ.ம.மு.க. கட்சி நிர்வாகிகள் இருவரை மட்டும் குறிவைத்து, தொடர்ந்து புகார் தெரிவித்து, அதிகாரிகளை அலைகழிப்புக்குள்ளாக்கி வருபவர்கள் குறித்து உளவுத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...