வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 17th April 2019 02:43 AM | Last Updated : 17th April 2019 02:43 AM | அ+அ அ- |

சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் அறக்கட்டளை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சண்முகா மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற இக் கருத்தரங்குக்கு அமைப்பின் நிர்வாகத் தலைவர் ஜே.எம். பூபதி தலைமை வகித்தார்.
தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவர் தாரை.அ. குமரவேலு கருத்தரங்கைத் துவக்கி வைத்து, வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற தலைப்பில் பேசியது:
வாக்காளர்கள் தங்களது வாக்கின் வலிமையை சரிவர தெரியாமலே இருக்கின்றனர். வாக்குகளை விற்பதன் கேடுகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற முடிவுக்கு வரச்செய்ய வேண்டிய சமுதாய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.
பணத்துக்காக வாக்குகளை விற்பது சுதந்திரப் போராட்டத் தியாகிகளை அவமதிப்பதாகும். வாக்குகளை விற்பது தங்களின் அடிப்படை உரிமைகளை விற்பதற்கு சமமாகும். இந் நாட்டின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கூடிய ஒரே ஆயுதம் வாக்குரிமை ஆகும். அதை பணத்துக்கு விற்பது அறியாமையின் உச்சம் என்றார்.
நிகழ்ச்சியில் செயலர் எல். பிரபாகரன், சண்முகா மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் மருத்துவர் பி.எஸ். பன்னீர்செலவம், பொருளாளர் ஏ. ஸ்ரீ பாஸ்கர் ஆகியோர்
பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...