மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் சேலம் இளைஞருக்கு தங்கம்
By DIN | Published On : 26th April 2019 02:56 AM | Last Updated : 26th April 2019 02:56 AM | அ+அ அ- |

மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தங்கம் வென்றார்.
மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் இந்தியா, மலேசியா, இலங்கையைச் சேர்ந்த 36 மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய அணியின் சார்பாக 12 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். இதில் இந்திய அணியில் சேலம் மாவட்டம் மேட்டூர் சூரபள்ளி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் இடம் பெற்றிருந்தார். சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சுப்பிரமணியிடம் வாழ்த்து பெறுவதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்திருந்தார்.
இதுதொடர்பாக செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
நான் மிகுந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தரையில் அமர்ந்து விளையாடும் கைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக பயணத்திற்கான பணத்தினை கூட திரட்ட முடியவில்லை.
நண்பர்களின் உதவியுடன் ரூ.30 ஆயிரம் கடன் பெற்று மலேசியா சென்று விளையாடி இந்திய நாட்டிற்காக தங்கப்பதக்கம் வென்றேன். தமிழக அரசு ஏதேனும் உதவி செய்து வாழ்வாதாரம் மேம்படும் வகையில் உதவிட வேண்டும். மேலும் நண்பர்களிடம் பெற்ற ரூ.30 ஆயிரம் கடன் தொகையை அடைத்திட உதவி புரிய வேண்டும் என்றார்.