மக்களின் குரலாக திமுக ஒலித்துக் கொண்டிருக்கிறது: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
By DIN | Published On : 28th August 2019 10:17 AM | Last Updated : 28th August 2019 10:17 AM | அ+அ அ- |

திமுக மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை காலை சேலம் வந்தார். இதனிடையே பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பேசியது: சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர் தெற்கு ஒன்றியத்திலிருந்து பாமக மற்றும் தே.மு.தி.க-வில் இருந்து விலகி திமுகவில்
இணைந்துள்ளனர். திமுக ஏறக்குறைய 8 ஆண்டு காலமாக எதிர்க்கட்சி என்ற பொறுப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், ஆட்சியிலிருந்து என்னென்ன காரியங்களைச் செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம். நீங்கள் எல்லோரும், ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும் தி.மு.க. தான் மக்களுடைய குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது, மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்திருக்கிறீர்கள் என்றார் அவர்.
நிர்வாகிகள் குடும்பத்திற்கு ஆறுதல்: பின்னர் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வழக்குரைஞர் ஆர். ராஜேந்திரனின் வீட்டுக்குச் சென்று அவரது தாயார் அழகம்மாள் மறைவையொட்டி அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
எழுத்தாளரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நண்பரான வேங்கடசாமி மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். திமுக பொதுக் குழு உறுப்பினர் நாசர்கான் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி ரகமதுனிஷா மறைவையொட்டி அவரது படத்துக்கு அஞ்சலி
செலுத்தினார்.