சங்ககிரியை அடுத்த வளையக்காரனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலர் கே. ராணி தலைமை வகித்தார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜி. வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ. மணிமேகலை வரவேற்றார்.
பள்ளிக்குத் தேவையான பாத்திரங்கள், கணினி, கேரம் போர்டு, நாற்காலிகள், தேசத் தலைவர்களின் படங்கள், டிவிடி பிளேயர் உள்ளிட்ட பொருள்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று பள்ளிக்கு வழங்கினர்.
கிராமக் கல்வி குழு முன்னாள் தலைவர் தங்கவேல், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சுகன்யா, அறம் செய் நற்பணி மன்ற நிர்வாகிகள் சரவணன், சுதாகர், கோபிநாத், மோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். பள்ளி உதவி ஆசிரியை ஆர்.ரேவதி நன்றி கூறினார்.
ஓமலூரில்...
தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு திங்கள்கிழமை பொதுமக்கள் கல்வி சீர் வழங்கினர்.
தாரமங்கலம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பொ. பழனிசாமி வரவேற்றார். பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், பள்ளிக்குத் தேவையான அடிப்படை பொருள்களை கல்வி சீராக வழங்கினர். ஆசிரியர் பயிற்றுநர் மங்கையர்க்கரசி,கல்விக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூரில்...
கெங்கவல்லி அருகே 74. கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி சீர் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுவினரும், பொதுமக்களும், பள்ளிக்குத் தேவையான ரூ. 7 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வழங்கினர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ)சுஜாதா தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியை பொன்னி வரவேற்றார். இதில் ஆசிரியப் பயிற்றுநர் பாலமுருகன், எஸ்.எம்.சி. நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள் , ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதேபோல், முத்தாக்கவுண்டனூர் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு பொதுமக்கள் கல்விச் சீர்வரிசை திங்கள்கிழமை வழங்கினர்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட முத்தாக்கவுண்டனூர் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் கணினி, குடம், பள்ளிக்கு தேவையான பொருள்களை கல்விச்சீர்வரிசையாக வழங்கினர்.
இதை பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர்.