தமிழகத்திலும், புதுவையிலும் பாஜக காலூன்ற முடியாது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
By DIN | Published On : 12th February 2019 08:52 AM | Last Updated : 12th February 2019 08:52 AM | அ+அ அ- |

தமிழகத்திலும், புதுவையிலும் பாஜக காலூன்ற முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
ரயில் மூலம் மாஹி செல்வதற்காக திங்கள்கிழமை சேலம் வந்திருந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஸ்ரீசத்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நான் முதன் முதலாக அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு வந்திருக்கிறேன். தமிழகம் மற்றும் புதுவை மக்கள் நலமுடன் இருக்க வேண்டும். அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்பதற்காக இந்தக் கோயிலுக்கு வந்துள்ளேன்.
எந்தக் கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம். புதுச்சேரியில் தலைக்கவசம் 98 சதவீத மக்கள் அணியவில்லை. அதை படிப்படியாக அணியச் செய்வதுதான் எங்களுடைய நோக்கம்.
தமிழகத்திலும் புதுவையிலும், பாஜக காலூன்ற முடியாது. அகில இந்திய அளவில் பாஜக படுதோல்வி அடையும். பிரதமர் மோடியின் அரசாங்கத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். விவசாயிகள் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் உள்ள நெசவாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, மோடியை எப்போது வீட்டுக்கு அனுப்புவோம், எப்போது ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.
புதுவை மாநிலத்தில் விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்னரே நடவு நட்ட உடன் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.