விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்: ஆர்.நல்லகண்ணு
By DIN | Published On : 12th February 2019 08:51 AM | Last Updated : 12th February 2019 08:51 AM | அ+அ அ- |

வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 26- ஆவது மாநில மாநாடு சேலம் தமிழ்ச் சங்க வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் மாநாட்டை ஆர்.நல்லகண்ணு தொடக்கிவைத்து, செய்தியாளர்களிடம் கூறியது:-
விவசாயிகளின் பிரச்னைகளுக்காகப் போராடிவரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில், விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது போலித்தனமானதாகும். விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்திட அவசியம் உள்ள நிலையில் ரூ.6 ஆயிரம் என்பதை ஏற்று கொள்ள முடியாது.
மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது பாஜகவின் தேர்தல் அறிக்கையே தவிர வேறு ஒன்றும் இல்லை.
விவசாயிகள் பிரச்னைகளில் மத்திய அரசு அலட்சியம்: மத்திய அரசைப் போன்றே தமிழக அரசும் விவசாயிகளுக்கு எதிரான நிலையைக் கையாண்டு வருகிறது. கஜா புயலுக்கு பலர் உயிரிழந்து, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று உள்ளது. இந்த நிலையில் இதற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற தமிழக அரசு தவறி விட்டது.
கஜா புயல் நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கோரிய நிலையில், மத்திய அரசு ரூ.1,500 கோடி மட்டும் வழங்கியுள்ளது. அதேபோல காவிரி நதிநீர் விவகாரத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கி விவசாயிகளை வஞ்சித்துள்ளது.
இதுதவிர எட்டு வழி சாலை, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றை எதிர்க்காமல், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் அரசாகவே தமிழக அரசு உள்ளது.
ஊழலில் சிக்கியுள்ள மோடி அரசு சுதந்திர நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் அரசாகவும், பேச்சுரிமை, கருத்துரிமையைப் பறிக்கும் அரசாக உள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக தோல்வியை சந்திக்கும். 5 மாநிலங்களுக்கான தேர்தலில் பாஜகவுக்கு எந்த நிலை ஏற்பட்டதோ, அதே நிலைதான் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றார்.
மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.குணேசகரன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலர் அதுல் குமார் அஞ்சான், ஏஐடியூசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, மாநிலச் செயலர் பெ.சண்முகம், காவிரி பாசன விவசாய சங்கத் தலைவர் எஸ்.ரெங்கநாதன், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கு.செல்லமுத்து, விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.கே.தெய்வசிகாமணி, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.